பக்கம்:ரமண மகரிஷி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ரமண மகரிஷி


மரியாதை கொடுத்து விலகிச் செல்வதை இவர் கோழைத்தனமாய்க் கருதிக் கிண்டலடிப்பார்! சண்டை சச்சவுகள் வராத நாட்களே இல்லையென்று கூடக் கூறலாம்! அவ்வளவு வம்படிப்பார் ஊர்ப் போக்கிரிகளிடம்.

இரமணருடைய இவ்வளவு பயிற்சிகளும் எப்போதும் வீண் போவது கிடையாது. தனது உடலை அந்த வீர விளையாட்டுக்களின் வாயிலாக, ஒரு கட்டு மஸ்தான தேகமாக்கிக் கொண்டார். அதனால் இளம் வயது வெங்கட்ராமனைக் கண்டு பேசவும், பழகவும், நட்பு கொள்ளவும் ஊரார் பயப்படுவார்கள். இந்தக் காட்சிப் போக்குகள் சுந்தரமய்யருக்கே மாளா வேதனைகளைத் தந்தன.

திருமூலர் போன்ற மகான்களும், நமது நாட்டின் சித்தர் பெருமக்களும் உடலை ஓர் ஆலயமாக, கருத்தியது மரபல்லவா? ஏனென்றால் இல்லறம் நடத்துவோருக்கு உடல் வலிமையிருந்தால் தானே நோயை எதிர்த்துப் போராடிடும் சத்தி இருக்கும்? இல்லறத்துக்கு மட்டுமாதிட உடல் தேவை? துறவறத்துக்கும் தானே!

உடல்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம்; அவனுடைய உயிர்தான் இறைவன். இந்த உண்மையை வெங்கட்ராமன் உணர்ந்தானோ? அல்லது இயற்கையாகப் பிறப்புடன் வந்ததோ நமக்குத் தெரியாது. என்றாலும், வெங்கட்ராமன் தனது உடலைத் திடவலிவோடு பேணி வளர்த்து வந்தார்.

வெங்கட்ராமனிடம் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? தூக்கம். படுத்துத் தூங்கி விட்டால் அவரை யானையே ஏறி மிதித்தாலும் எழுப்ப முடியாத அளவுக்குக் கும்பகர்ண தூக்கம் தூங்கும் இயல்புடையவராக இருந்தார். கதவைத் தாளிட்டு விட்டு அவர் தூங்கி விட்டாரானால், கதவை உடைத்து தான் அவரை எழுப்ப வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/18&oldid=1280086" இலிருந்து மீள்விக்கப்பட்டது