பக்கம்:ரமண மகரிஷி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

19


திடீரெனக் காலமானார். அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் செலவுகளையும், காரியங்களையும், ஊரார் பக்க பலத்துடன் அந்தக் குடும்பம் செய்து முடித்தது.

வெங்கட்ராமனும், அவன் தமையனாரும், மதுரை மாநகரிலே உள்ள சுந்தரமய்யரது தம்பி சுப்பய்யர் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கி தங்களது கல்வியைத் தொடர்ந்தார்கள்.

மதுரையில் உள்ள ஸ்காட் நடுநிலைப் பள்ளி என்ற வெள்ளையர் நடத்தும் பள்ளியில் வெங்கட்ராமன் சேர்ந்து ஒழுங்காகப் படித்து வந்தார். மூத்தவன் நாகசாமி மேல் படிப்புக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

அதற்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் பள்ளியில் அண்ணனும், தம்பியும் சேர்ந்து கல்வி கற்றார்கள். இதற்கிடையே வெங்கட்ராமன் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்தான். இந்நிலையில் சுந்தரமய்யர் குடும்பத்திலுள்ள எவருக்கும் சந்நியாசி ஆகும் சாபம் நிறைவேறுமளவுக்குத் தெய்வ பக்தியோ, துறவு மனப்பான்மையோ, காணப்படும் அறிகுறிச் செயல்கள் ஏதும் ஏற்படவில்லை.

வெங்கட்ராமன் எல்லாரையும் போலவே கோயிலுக்குப் போவான். இறை வழிபாடு செய்வான்; திரும்பி வீடு வருவான். பள்ளிப் பாடங்களைப் படிப்பான்; தானுண்டு மற்ற பள்ளி வகுப்பு நண்பர்களுண்டு என்று விளையாடுவான். அவனது பள்ளி கிறித்துவர்கள் நடத்தும் பள்ளி. அங்கும் கூட பைபிள் பாடம் நடக்கும். அதைக்கூட கவனமாகப் படிக்க மாட்டான் அவன்.

எனவே, சாமியார் அவர்களது பரம்பரைக்கு இட்ட சாபம் பலிக்காது; சுந்தரமய்யர் குடும்பத்துக்கு நல்ல காலம்தான் என்று கிராம மக்கள் பேசினார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? அன்றுவரை அக்குடும்பத்தில் அதற்கான அறிகுறிகள் இல்லாதது தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/21&oldid=1280138" இலிருந்து மீள்விக்கப்பட்டது