பக்கம்:ரமண மகரிஷி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. அமைதியைத் தேடி

மாணவன் வெங்கட்ராமன் இங்கிலீஷ் இலக்கணத்தை, புத்தகத்திலே இருந்து பார்த்து பார்த்து எழுதிக் கொண்டிருந்தான். வகுப்பில் சில மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைக் கவனிப்பதில்லை! அதனால் அவர்கள் மறுநாள் அதை வீட்டிலே புத்தகம் பார்த்து எழுதுவார்கள். அவர்களுள் ஒருவனாக அன்று வெங்கட்ராமன் இருந்ததால், ஆசிரியருக்கு அஞ்சி இலக்கணத்தை எழுதிக் கொண்டிருந்தான்!.

இந்த நிலை வெங்கட்ராமனுக்கு ஏற்பட என்ன காரணம்? வகுப்பில் ஆசிரியர் பாடம் போதிக்கும்போது, அவன் ஏதோ சிந்தனையில் தன்னையுமறியாமல் மூழ்கி விடுவதுண்டு! இந்தப் பழக்கம் அவனுக்கு வழக்கமாகி விட்டதால், ஆசிரியர் அவனை அடிக்கடி பார்த்துக் கண்டிப்பார். இந்த வழக்கத்தில் அன்று அதிக நேரமாக ஆழ்ந்து கிடப்பதைக் கண்ட ஆசிரியர், ‘வெங்கட்ராமா, எழுந்திரு! பாடம் சொல்லும் போது தூங்குகிறாயா? அல்லது மயக்கமா? என்ன காரணம்?’ என்று கோபமாகக் கேட்டார்.

அவனால் வாய் திறந்து ஏதும் பதில் கூற முடியவில்லை! மௌனமாக நின்றிருந்தான். உடனே ஆசிரியர் சினத்தால் அவனைப் பார்த்து, நாளை வரும்போது இலக்கணப் பாடத்தை மூன்று முறை எழுதிவா என்று ஆணையிட்டு விட்டார். அதை எழுதாமல் போக முடியுமா வகுப்புக்கு? அதனால் தான் அன்று அவன் புத்தகத்தைப் பார்த்து வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தான். பாவம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/22&oldid=1280140" இலிருந்து மீள்விக்கப்பட்டது