பக்கம்:ரமண மகரிஷி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

23




இதைக் கேள்விப் பட்ட வெங்கட்ராமனுக்கு, ஏதோ ஒரு புத்துணர்ச்சி புலப்பட்டது. திருவண்ணாமலை போக வேண்டும்! அருணாசலத்தைப் பார்க்க வேண்டும் என்பதையே அன்று முதல் நினைத்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் வெங்கட்ராமன் தினந்தோறும் மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வான்; வழிபாடு செய்வான்; அங்கே உள்ள சிவ மகிமை ஓவியங்களை உற்று நோக்கிப் படிப்பான்; சிந்தனை செய்து கொண்டே வீடு வருவான்.

ஒரு நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சேக்கிழார் பெருமானுடைய ‘திருத்தொண்டர்கள் மாக்கதை’ வரலாறு நடந்து கொண்டிருந்தது. அதை அமர்ந்து கேட்டான். அவர்களது பக்தி உணர்வுகள் வெங்கட்ராமனின் நெஞ்சிலே பதிந்து விட்டது! அவனது வாய் பெரியபுராண அடியார்களைப் பற்றியே பேசியது! எப்போது பார்த்தாலும் சிவ வரலாறே அவனைச் சிந்தனையில் ஆழ்த்தியது.

இந்தச் சைவ சிந்தனை ஞானக் கிளர்ச்சி சில நாட்களுக்குப் பின் மறைந்துவிட்டது. அவனுக்குத் திருவண்ணாமலை நினைப்பும், அருணாசலம் சிந்தனையும்தான் நாளுக்கு நாள் மேலிட்டு வளர்ந்து விரிந்து மனம் முழுவதும் பரவியது.

“சாதகன் ஆர்வம் அதிகமானவனாக இருந்து, சத்குருவின் உபதேசம் கிடைத்து, சாதனை இடையூறு இல்லாமல் நடைபெற்று, வேளையும் அதற்கு வந்து விட்டால் சித்தி கிட்டும்” என்று பின்னாளில் பகவான் ரமண மகரிஷியாக மாறிய பின்பு அவர் யாக மாறிய பின்பு அவர் கூறிய அருள் வாக்குக்கு ஏற்றவாறு, வெங்கட்ராமன் என்ற பதினைந்து வயது பையனுக்கு இன்னும் வேளையே வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/25&oldid=1280145" இலிருந்து மீள்விக்கப்பட்டது