பக்கம்:ரமண மகரிஷி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

33



வெங்கட்ராமன் உடனே ‘திண்டிவனம் வரை டிக்கெட் வாங்கி உள்ளதாகச் சொன்னான் அந்த மதகுருவிடம்!

‘என்ன திண்டிவனமா? என்னய்யா தம்பி, பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்? திருவண்ணாமலை போகிறவன் திண்டிவனம் டிக்கெட் வாங்கினேன்' என்கிறாயே!’

‘சரி, சரி பரவாயில்லை. ஒரு காரியத்தை நீ கவனமாகச் செய்ய வேண்டும். விழுப்புரம் சந்திப்பிலே நீ இறங்கி வேறு வண்டிக்கு மாறி ஏறித் திருக்கோயிலூருக்கும், திருவண்ணாமலைக்கும் போகலாம்! என்ன தம்பி நான் சொல்வதைக் கவனமாகத்தானே கேட்டாய்?’ என்றார் மீண்டும் அதே முஸ்லீம் மத குரு.

‘ஆமய்யா’ என்ற அந்தச் சிறுவன், தனது டிக்கட்டை திண்டிவனத்துக்குப் பெற்று விட்டதை எண்ணி வருந்தினான். ஆனால், மௌல்வி கூறிய விவரத்தால் திருவண்ணாமலை போகும் வழியைப் புரிந்து கொண்டான்! இது கண் பழுதுற்ற ஒரு பயணிக்கு குத்துக்கோல் ஒன்று கிடைத்த மாதிரியாயிற்று அவனுக்கு! திருவண்ணாமலை என்ற பெயர் மௌல்வி வாயிலும், மற்றப் பயணிகள் வாயிலும் பெருமையாகப் பேசப்பட்டதை அவன் கேட்டு மனத் திருப்தியடைந்தான். இந்த வரம்பு மீறிய மகிழ்ச்சியைப் பெற்ற வெங்கட்ராமன் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து போனான்!

வந்தது விழுப்புரம் ரயில் நிலையம்! மதுரையிலே அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து விழுப்புரம் வரும்வரை ஒரே பட்டினி! பாவம், பசி அவன் வயிற்றிலே நெருப்பை மூட்டியது! ஒரே எரிச்சல்! அதனால் ரயில் நிலையத்தை விட்டு வெளிப் புறம் வந்த அவன் அங்குமிங்கும் சுற்றினான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/35&oldid=1280309" இலிருந்து மீள்விக்கப்பட்டது