பக்கம்:ரமண மகரிஷி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

39


 வந்தார். அவரிடம், ‘ஐயா, பசிக்கிறது. சாப்பிட ஏதாவது ஆகாரம் கொடுப்பீர்களா?’ என்று அவன் கேட்டான்.

அதற்கு அவர், ‘உள்ளே போய் கேள் தம்பி, இன்று கண்ணபரமாத்மா பிறந்தநாள், ஏதாவது ஓர் ஆகாரம் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பார்கள் தம்பி, என்று கூறிவிட்டுப் போனார்.

வெங்கட்ராமன் கடுக்கன்களைக் கைக்குள் மூடிக் கொண்டு வீட்டுக் குள்ளே சென்று நின்றான். அந்த வீட்டுக்கார அம்மாள் யார் இந்தப் பையன்? பார்த்தால் பிராமணச் சிறுவனைப் போல இருக்கின்றானே என்று அவனைத் தோற்றத்தால் புரிந்து கொண்டு, ‘என்ன தம்பி வேணும்’ என்றார்.

‘அம்மா, பசி, ஏதாவது ஆகாரம் தருவீர்களா? என்று கேட்டான் வெங்கட்ராமன், அன்று கண்ணபெருமான் பிறந்த நாளல்லவா? அவளுக்கு ஒரே மகிழ்ச்சி! காரணம், கண்ண பரமாத்மாதான் இப்படி பிராமணச் சிறுவன் உருவத்திலே வந்து அன்னம் கேட்கிறார்’ என்று எண்ணிக் கொண்டு, சிறுவனை உட்காரச் சொல்லி, உணவில்லாததால் வயிறு நிரம்பச் சிற்றுண்டி கொடுத்தாள். வெங்கட்ராமன் அந்த அம்மையார் கொடுத்த அன்பான அமுதை வயிறார உண்டான்.

வெங்கட்ராமன் கிடைத்த சிற்றுண்டியைப் பசி வேகத்தால் உண்டு கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்குரியவரான முத்துசாமி என்பவர், சிறுவனைப் பார்த்து இரக்கப்பட்டு, ‘மெதுவாகச் சாப்பிடு. ஏன் அவசரம் அவசரமாகத் தின்கின்றாய்’ என்று அம்மையாரை விட அன்போடு ஆறுதல் கூறினார்.

அப்போது வெங்கட்ராமன் உண்டு முடித்து எழுந்து கை அலம்பிக் கொண்டு அவரருகே வந்து நின்று, 'நான் திருவண்ணாமலை போக வேண்டும். என்னிடம் பணமில்லை ரயிலுக்கு டிக்கட் வாங்கிட. அதனால், இந்த எனது கடுக்கன்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/41&oldid=1280533" இலிருந்து மீள்விக்கப்பட்டது