பக்கம்:ரமண மகரிஷி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ரமண மகரிஷி


 பிச்சைக்காரர்கள் கோபுரம் முன்பு அருணாசலமே கதியென்று விழுந்து கிடந்தார்கள். அவர்களுக்கு அதுதான் வீடும் வாசலும்!

திறந்து கிடந்த கோபுரத்துக்குள்ளே முதல் ஆளாக வெங்கட்ராமன் நுழைந்தான். நேராகக் கருப்பக் கிரகத்துக்குப் போனான். யாராவது கேட்பார்களே என்ற அச்சமே எழவில்லை அந்தச் சிறுவனுக்கு அருணாசலேஸ்வரர் திருவடிகளிலே வீழ்ந்து, வணங்கி, கண்ணீர் சிந்தினான் அவ்வளவும் ஆனந்தக் கண்ணீர்! ‘ஈஸ்வரா, பெருமானே, உம்மைவிட எனக்குக் கதி வேறுயார்? வீட்டைத் துறந்தேன் உம்மை நம்பி நாடி வந்துளேன்; பெருமான் நீங்கள்தான் இனி என்னைக் காக்கும் அம்மையும்-அப்பனும், என்று வாய்விட்டுக் கூறி வணங்கி விட்டுக் கோபுர வாயிலுக்கு மீண்டும் திரும்பி வந்தான் வெங்கட்ராமன்.

அருணாசலேஸ்வரரை வணங்கிய பின் அந்தச் சிறுவன் கண்ட முதல் பலன் என்ன தெரியுமா? திருவண்ணாமலைக்கு வரவேண்டும் என்று வெங்கட்ராமன் நினைப்பதற்கு ஆறேழு வாரங்களுக்கு முன்பே, அந்தச் சிறுவன் மதுரையிலே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நேரத்திலேயே, அவனது உடலிலே ஏதோ ஓர் அரிப்பும்-எரிச்சலும் ஏற்பட்டு எப்போது பார்த்தாலும் உடலைச் சொறிந்த வண்ணமே இருந்தான்.

அருணாலலேஸ்வரப் பெருமானை, வெங்கட்ராமன் திருவண்ணாமலைத் திருக்கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்பு, அந்த எரிச்சலும், அரிப்பும் எங்கு போய் மறைந்ததோ தெரியவில்லை. மாசுமறுவற்ற உடலையுடைய அழகிய தோற்றமே அவனுக்கு மீண்டும் ஏற்பட்டு விட்டதாக, பகவான் ரமண மகரிஷி தனது வரலாற்றின் ஓரிடத்தில் எழுதியுள்ளார். அதுதான் அவர் கண்ட முதல் அருணாசல மகிமையாகும். எரிச்சலோடும் அரிப்போடுமா போயிற்று? அவர் எண்ணங்களில் அன்று முதல் மண், பொன், பெண் என்ற சிற்றின்ப எண்ணங்களும் அழிந்து விட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/44&oldid=1280710" இலிருந்து மீள்விக்கப்பட்டது