பக்கம்:ரமண மகரிஷி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என், வி. கலைமணி

57

பழங்கள், பணம் முதலியவற்றை என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்கள், குருமூர்த்தப் பாதுகாப்புக் குழுவினர். ஏனென்றால், வெங்கட்ராமர் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் ஒரு சேர் பால் அருந்தினார். நாளுக்கு ஒரு முறை அவர் பருகிய பால் போக, பழங்கள் போக, மீதி அனைத்தையும் அவரைக் காணவரும் மக்களுக்கே பசியாற, வழங்கி வந்தார். அதுவும் அவர் திருக்கையாலேயே அவற்றைக் கொடுத்தார். மக்களும் யோகி தரும் அருட் பிரசாதமாக அவற்றை வாங்கி உண்டு வந்தார்கள்.

பாலயோகி ஒரு நாளைக்கு ஒரு முறை பால் குடித்துவிட்டு, பல நூறு மக்களிடையே உள்ள குறைபாடுகளை விசாரணை செய்து. அவரவர்க்குரிய குறை தீர்க்க நிவாரணங்களைக் கூறிக் கொண்டிருக்க முடியுமா? எனவே, உழைப்பு அதிகமானது; உடற்குரிய போதுமான சக்தி குறைந்தது. இதனால் நாளுக்கு நாள் அவரது உடல் பலவீனமாகிக் கொண்டே வந்ததால், ஒரு நாள் அவரையும் அறியாமல் மயங்கிக் கீழே விழுந்து விட்டார். அதனால் நடக்க முடியாத நிலையேற்பட்டு விட்டது.

இயற்கையாகவே வெங்கட்ராமர் சிறுவயதில் திடகாத்திர உ.டலோடு தான் இருந்தார். என்றைக்குத் தனது வீட்டைவிட்டு வெளியேறினாரோ, அன்று முதல் சரியான உணவும் இல்லை. பசி, பட்டினி தொல்லை. இதனால் அவரது உடல் பலவீனமாயிருந்தது. இப்போது ஒருவேளை பால், சில பழங்கள் அவரின் உழைப்புக்கு ஈடுகொடுக்கும் உரமாக இல்லாமல் போகவே, பாலயோகியுடைய உடலை அவ்வப்போது மயக்கம் தாக்கியபடியே இருந்தது. உடம்பு வெறும் எலும்புக் கூடுபோலப் காட்சி தந்தது.

எவ்வளவுதான் அவர் எச்சரிக்கையாக இருந்தாலும் மயக்கமும் - பலவீனமும் அடிக்கடி வர தடுமாறுவார். தள்ளாடுவார்; விழுவாக்ர். சில நேரங்களில் அவருடன் அருகிலிருப்பார் அப்படியே கைத்தாங்கலாகத் தாங்கிக் கொள்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/59&oldid=1280777" இலிருந்து மீள்விக்கப்பட்டது