பக்கம்:ரமண மகரிஷி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என், வி. கலைமணி

63




மதுரையிலே அவனுடன் படித்த பள்ளி மாணவர்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் வெங்கட்ராமன் திரும்பவில்லை. அவனது தமையனார் நாகசாமி எங்கெங்கோ தேடினார் தம்பி வெங்கட்ராமனை. நாகசாமி அப்போதுதான் அவனைக் கோபமாக ஏசிய நஞ்சின் கொடூரத்தை உணர்ந்தார்! இருந்தும் என் செய்ய உடனே மானா மதுரையிலே உள்ள தனது அன்னையாருக்கு ஆளனுப்பி தேடினார்.

யார் யார் வெங்கட்ராமன் நண்பர்களோ அவர்களிடமெல்லாம் சென்று விசாரித்தார் நாகசாமி. எங்கெங்கு அவனுக்கு நண்பர்கள் உண்டோ, அங்கங்கே எல்லாம் சென்று கேட்டார். ஒரு புறம் வெங்கட்ராமனுடைய சிற்றப்பா அவனைத் தேடியலைந்து வேதனையோடு ஓய்ந்தார்.

மகனைக் காணவில்லை என்பதை அறிந்த அவனது தாயார் தெருத் தெருவாக மானா மதுரை வீதிதோறும் வெங்கட்ராமா? வெங்கட்ராமா! என்ற வேதனைக் குரலோடு அலைந்தாள். எங்கும், எந்தவித ஆறுதல் பதிலும் அவளுக்கு கிடைக்கவில்லை.

மகனை இழந்த அன்னை அழகம்மை சும்மா இருப்பாளா? புருஷனை இழந்து ஐந்து ஆண்டுகூட ஆகவில்லையே, இதற்குள் இழந்து விட்டோமே மகனையும் என்று அழுதபடியே இருந்தாள்! அன்ன ஆகாரம் எதுவும் உண்ணாமல் சோகப் பள்ளத்திலே வீழ்ந்தார். எழ முடியாமல் தத்தளித்தாள் அழகம்மை!

அன்னை அழகம்மை ஓர் புறம். அண்ணன் நாகசாமி மறுபுறம். சிற்றப்பா சுப்பய்யர் இன்னொரு புறமாகத் தேடினார்கள். கடைசிவரை அவர்கள் தேடிக் கொண்டே இருந்தார்களேயன்றி, எந்தவித ஆறுதல் பதிலும், மனதிற்கு உற்சாகமூட்டும் வழிகளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை; தென்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/65&oldid=1280789" இலிருந்து மீள்விக்கப்பட்டது