பக்கம்:ரமண மகரிஷி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

79


கர்மாவா? தீமைகள் பலவற்றுக்கும் துன்பங்கள் பலவற்றுக்கும் காரணமான கர்மா, இவ்வாறு பலரிடம் பலவிதமாக ஏன் இருக்கிறது? என்று வட இந்தியர் கேட்டார்.

கர்மா பற்றி ரமண மகரிஷி

கோபமாக வந்திருந்த அந்த வட இந்தியரின் முகத்தை ஒருதரம் உற்றுப் பார்த்தார். அவர்களது உள்ள உணர்ச்சிகளை மகரிஷி நன்கு புரிந்து கொண்ட பின்பு, அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அன்புடன் பதில் கூறினார்.

கர்மாவைப் பற்றிக் கேட்டீர்கள். அது யாருடைய கர்மா? இரண்டு வகைகளிலே கர்மா உண்டாகிறது. ஒன்று இறைவனுடையது. மற்றொன்று மனிதனுடையது. கடவுளுடையது தனிப்பட்டது. அதனால் அது கர்மாவிலே இருந்து விடுபட்டது. மனிதன் வேறுபட்டவன். எனவே கர்மா பலவகையானதாகின்றது.

தன்னிலிருந்து தானே மனிதன் பிரிந்து கொண்டால், வேறுபட்ட மனிதர்கள் இருக்க மாட்டார்கள். வேறுபட்ட பல கர்மாக்களும் இருக்கா. இன்னல்களும், துன்பங்களும் மறையும் சொர்க்கத்தைக் காண்பவன் யார் தெரியுமா? தன்னிலிருந்து தானே பிரிந்தவன் தான். அவனால்தான் காண முடியும் சொர்க்கத்தை! மற்றவர்கள் நரகத்தைத்தான் காண்பார்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தீமையானது விரைவில் அல்லது சற்று தாமதத்தில் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பது சான்றோர்கள் அனுபவம். இவ்வாறு நடப்பது ஏன்?

தான் என்பது எல்லோரிடத்தும் ஒன்றே. மற்றவரை நீ பார்க்கும்போது, நீயே உன்னை, அவர்கள் உருவங்களிலே பார்த்துக் கொள்கிறாய். நீ மற்றவர்களிடம் அன்போடு பழக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/81&oldid=1281260" இலிருந்து மீள்விக்கப்பட்டது