பக்கம்:ரமண மகரிஷி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

81


தொடர்பும் கிடையாது. எல்லாவித அளவு கோல்களும் கற்பனைதான். எனவே, எல்லாமே தவறானவை. சிலர் நீண்ட காலத்தையும் வேறு சிலர் குறைந்த காலத்தையும் எடுத்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதுபோல் வருவதும் செல்வதும் ஆன்மா அன்று என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய மனம் தான் அப்படித் தோன்றச் செய்கின்றது.

எந்த நிலையிலிருந்து இயங்க வேண்டியதிருந்தாலும், மனமானது அதற்கேற்றாற்போல ஓர் உடலை உண்டாக்கிக் கொள்கிறது. இந்த உலகில் ஒரு மானுட உடல், கனவுலகில் ஒருகனவு உடல். இந்தக் கனவு உடல் கனவுலகில் பெய்யும் மழையால் நனைகிறது. நோயால் தாக்குறுகிறது. மரணத்திற்குப் பிறகு அது சிலகாலம் இயங்காமல் இருக்கிறது. கனவில்லாத் தூக்கம் போல.

எனவே, அது உடலில்லாமல் இருக்கிறது. சீக்கிரமே அது புதிய உலகில், புதிய உடலில் இயங்க ஆரம்பிக்கின்றது. ‘மறுபிறப்பு’ என்று சொல்லப்படுகின்ற மற்றோர் உடலில் இயங்கும் வரை இவ்வாறு செய்கிறது. ஆனால், தன்னைத்தானே உணர்ந்து கொண்ட ஞானியின் மனமானது. மானிட உடலின் அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்ட காரணத்தால், மரணத்தினால் அவன் பாதிக்கப்படுவதில்லை. அவனது மனமானது மறுபடியும் எழுந்து பிறப்பையும், மறுபிறப்பையும், வாழ்க்கையையும் மரணத்தையும் ஏற்படுத்துவதில்லை.

உண்மையான இறப்போ அல்லது உண்மையான பிறப்போ கிடையாது என்பது இதனால் நன்றாகப் புரிகிறது. மனந்தான் இதுபோன்ற பிரமிப்புக்களை உருவாக்குகின்றது. ஆத்மா ஞானம் அடையும் வரை, இவ்வகையான உண்மை போன்ற பிரமைகள் தொடர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/83&oldid=1281272" இலிருந்து மீள்விக்கப்பட்டது