பக்கம்:ரமண மகரிஷி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ரமண மகரிஷி




தம்முடைய மகனை இழந்துவிட்ட வேதனையில் கடவுளிடமும், மகரிஷியிடமும் நம்பிக்கை குன்றிய ஒரு குரு குல அடியார் நீண்ட நாட்களாக ஆசிரமத்துக்கு வராமலிருந்தார். பிறகு ரமண மகரிஷியிடம் இது குறித்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்ற தீர்மானத்துடன் அவரைக் காண வந்தார். ரமணரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்ற முன் கூட்டிய திட்டத்துடனே அவர் வருகை தந்தார்.

வந்தவர்: சுவாமி, நம்பிக்கை என்றால் என்ன? என்றார்.

மகரிஷி: நம்பிக்கை, அன்பு, கருணை எல்லாம் உன்னுடைய தன்மைகளே நீதான், என்றார்.

வந்தவர்: அப்படியானால், நம்பிக்கை, கருணை எல்லாம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதால் வருகின்றன. எனவே, நம்பிக்கை, அன்பு என்று நாம் அழைத்தவை மாறுபடும். உண்மையாகவும் இருக்காது. அப்படித்தானே?

“ஆமாம்.”

“துன்பம் என்பது ஒரு நினைவுதானா?”

“எல்லா நினைவுகளுமே துன்பங்கள்தாம்”

“இன்பம் தரக்கூடிய நினைவுகளும் துன்பம் அளிப்பவையா?”

“ஆமாம், களங்கமற்ற, மகிழ்ச்சியான, தன்னைத்தானே உணருதலிலிருந்து ஒருவனுடைய கவனத்தைத் திருப்புவதனால், அவையும் துன்பம் தருபவையே.”

“மகரிஷியை அருணாசலத்திற்கு வரவழைத்தது என்ன?”

“உன்னை இங்கே வரச் செய்தது எது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/84&oldid=1281276" இலிருந்து மீள்விக்கப்பட்டது