பக்கம்:ரமண மகரிஷி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

7




திருவருள் திருஞானம் அலை மோதும் இந்தத் திருவண்ணாமலை திருக்கோவில் மண்ணிலிருந்தும், மலைக் குகையிலிருந்தும் தான், அந்த மகான் ரமணரிஷி, ‘நான் யார்?’ ‘நான் யார்?’ என்று தன்னையே ஆன்ம விசாரணை செய்து வெற்றி பெற்றார்.

‘நான் யார்?’ என்று தன்னையே தான் கேட்டுக் கொள்வதற்கு ஆழமான மனோபலம் பெற்றார். முதன் முதலில் அவர் தவநிலையை மேற்கொண்ட போது, அதற்குரிய மனோபலம் இல்லை என்பதை உணர்ந்து. மூச்சுக் காற்றைக் கண்காணித்தார். போகப் போக அந்தச் சுவாசக் காற்றே அவர் மனத்தைக் கட்டுப் படுத்தியதைக் கண்டார்.

ஆனால், மனோவிசார மார்க்கத்தில் ‘நான்’ எனும் ஆணவ மனம் எங்கே இருந்து தோன்றுகிறது என்பதை அவர் கண்டு பிடிக்க முயற்சி மேற்கொண்டார். இந்த வழி, மூச்சைக் கண்காணித்தலைத் தன்னகத்தே கொண்டது என்பதையும் பகவான் ரமணர் உணர்ந்தார்.

எங்கே இருந்து எண்ணங்கள் புறப்படுகின்றன என்ற மூலத்தைக் கண்காணிக்கும் போது, நாம் மூச்சுக் காற்றின் மூலத்தையும், நோக்குகிறோம். ஏனென்றால், ‘நான்’ என்ற எண்ணம், மூச்சு என்ற இரண்டுமே ஒரே மூலத்திலிருந்துதான் புறப்படுகின்றன என்பதை அவர் கண்டார்.

அதை அவர் கண்டு பிடிக்க முயற்சித்தபோது, அதற்கென்ற ஒரு தனி இருப்பு ஏதும் கிடையாது என்பதையும், ஆனால், உண்மையான ‘நான்’, என்பதோடு அது இரண்டறக் கலந்து விடுகிறது என்றும் அவர் கண்டார்.

மகான் ரமண மகரிஷி ‘நான் யார்?’ என்பதைக் கண்டு பிடிக்க, ஆழமான மனோ பலம் மனிதனுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/9&oldid=1280011" இலிருந்து மீள்விக்கப்பட்டது