பக்கம்:ரமண மகரிஷி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

97


முழக்கங்கள் எழாதா என்று சில நிமிடங்கள் எதிர் பார்த்துவிட்டு, பிறகு அந்தப் பாதிரியே, ‘நல்லவன் சொல்லாமல் போவான்’ என்ற அறிவு மொழிக்கு ஆளானார்! சென்றுவிட்டார்!

வந்த பாதிரி, மத நல்லிணக்க வாதியாக இல்லாமல், தமது பேச்சுத் திறமையால் ரமணாஸ்ரமத்தைக் கலக்கடிக்கலாம் என்று பேசுவதற்காக வந்தவர் என்பதைக் கூடியிருந்தோர் புரிந்து கொண்டனர். இதையெல்லாம் மகரிஷி ரமணர் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.

கடவுளைக் காண பையன் துடிப்பு!

இருபது வயதுடைய ஒரு வாலிபன் அக்கூட்டத்திலே எழுந்து ரமண மகரிஷியார் திருமுகத்தை நோக்கி, மெதுவாக, நான் இந்த வாழ்க்கையில் கடவுளைக் காண முடியுமா சுவாமி? என்று கேட்டான்.

அவனைப் பார்த்து ரமணர் சிரித்துக் கொண்டே, தம்பி! நீ கேட்ட கேள்வியில் உள்ள ‘நான்’ என்பது யார்? என்றார்.

நான் கேட்டதை முதலில் சொல்! அந்த நான் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? வாழ்க்கை என்ற சொல்லில் அடங்கியுள்ள பொருள் என்ன? என்றார்.

கேட்டவன் இளைஞன்! எனவே பதில் தெரியாமல் அந்த வாலிபன் திரு திரு என்று விழித்தான். அதற்குள் அந்த வாலிபனுக்குப் பின்னாலே இருந்த ஒருவர் ஒரு தாளில், ஒரு வினாவை எழுதி மகரிஷியிடம் நீட்டினார். வேறொன்றுமில்லை. காலம், தூரம் பற்றியதே அக் கேள்வி.

மகரிஷி சிங்கம் போலச் சிலிர்த்து எழுந்தார். ‘இடம், காலம் இவற்றுடன் ஆத்மாவைப் பற்றியும் கேள்வி எழுப்பியவர் யார்? என்றார் ரமண மகரிஷி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/99&oldid=1281392" இலிருந்து மீள்விக்கப்பட்டது