பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ரோஜா இதழ்கள்

எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, நல்ல மல்லிகைப் பூப் போன்ற சாதத்தைப் பரிமாறுகிறாள். நெய்யைத் தாராளமாக ஊற்றுகிறாள்.

மைத்ரேயிக்குக் கூச்சமாக இருக்கிறது.

“சங்கோசமில்லாம சாப்பிடு. எதுக்கு சங்கோசம்? வேலை செய்றோம் சாப்பிடறோம். வீடு கிடக்கும் கிடையப் பாரேன். ஆனா அவ என்ன பண்ணுவா? வெளிலே வேலைக்குப் போறவ வீட்டை எப்படிப் பாத்துப்பா? அந்தக் காலத்திலே லோகா துரைசானிபோல வளர்ந்தவ. அவப்பாவுக்கு ஒரே பொண்ணு, வீட்டோடு லேடி இருந்து பாடம் சொல்லிக் குடுத்து, பழகச் சொல்லிக் கொடுத்து செல்லமா வளர்ந்த பொண்ணு...” என்று சொல்லிக் கொண்டே அவள் இலையைப் பார்த்துக் குழம்பை ஊற்றுகிறாள்.

“அவர்... ஏன் அப்படித்தனியே இருக்கார் மாமி? உடம்பு சரியில்லையா?”

“ஒரு உடம்பையும் காணோம். அது ஒரு மாதிரி. அந்தக் காலத்திலே அத்தை பிள்ளை, அஞ்சு குடும்பத்துச் சொத்து வெளியில் போகக் கூடாதுன்னு குடுத்துட்டா. அவன் இங்கே வந்து இருக்க மாட்டேன்னுட்டான். இவளால் கிராமத்துக்குப் போக முடியுமா? போனால் ஒரே முசுடு. கையில் கரி படாம வளர்ந்த பொண்ணு. கற்சட்டி தேச்சு அடுப்பு மெழுகணும்பானாம். அப்புறம் அவப்பாவே அனுப்பல. அவப்பா செத்துப் போனப்புறம் கூட வரல. கொஞ்ச நாளைக்கு முன்னதான் ஊரில ஏதோ தகராறு, குடியானவங்களோட சண்டை. என்ன விவகாரமோ, போட்டு அடிச்சுட்டாங்கன்னு கேள்வி. லோகாதான் போயி அழைச்சிண்டு வந்தா ராவோடு ராவா. நான்போனதடவை வந்தபோது பர்ண சாலை பூட்டிக் கிடந்தது. இவன் மாடிலதானிருந்தான். இப்பதான் பாலா சொன்னாளே? அவள் புத்திக்கும் அறிவுக்கும், இப்படிக் கொண்டவன் அதிர்ஷ்டமில்லாம முசுடாப் போச்சு. இவனாலேயே இந்த வீட்டில ஒரு சமையல் ஆள் நிலைக்கிறதில்லே...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/102&oldid=1099684" இலிருந்து மீள்விக்கப்பட்டது