ராஜம் கிருஷ்ணன்
9
சோஷியல் வொர்க்கர் லோகநாயகி அம்மா வந்திருந்தா. அவ ஏதோ அநாதாசிரமத்துக் கேசு விஷயமாகத்தான் பேசினா. சினிமான்னு ஆசைப்பட்டு வெளியூர்லேந்து கபடு தெரியாத பெண்கள் ஓடிவந்து ஏமாந்து போறதுன்னெல்லாம் சொல்லிண்டிருக்கச்சே, வக்கீல் சொன்னார். இப்படி இந்தப் பக்கம் கூட சினிமாக்குப் பாட்டெழுதும் ஒருத்தன் ஒரு பிராமணப் பெண்ணைக் கலியாணம் பண்ணிண்டிருக்கிறான்னு. எனக்கு சுருக்குனு தச்சுது. விசாரிச்சுண்டு பஸ்ஸைப் பிடிச்சு வந்தேன். அவன் காலம்பரவே போயிடுவனா?”
“இல்லே, இன்னிக்கு புதுப்படம் விஷயமா யாரோ வரச்சொல்லியிருக்கார்னு காலமே போயிட்டார்.”
“கவியெல்லாம் ஒரு கிஃப்ட், நீ இப்படித் துணிஞ்சு கல்யாணம் செஞ்சிண்டிருக்காத போனா, அவ இன்னும் எங்கியானும் லேவடியாக் கொண்டு தள்ளிருப்ப. சாதி சனம் என்ன வேண்டியிருக்கு, ஒண்ணு வாழ்ந்தா ஒண்ணு பொறுக்கல. இவன், ஏம்மா முதலியாரோ, பிள்ளையோ?”
“அதெல்லாம் சொல்லிக்கிறதில்லே. இருங்கோ மாமா, இத வந்துட்டேன்....” என்று சமையலறை மறைவுக்கு வருகிறாள். மாமாவுக்குக் காபி போட்டுக் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பண்ணை வீட்டில் ‘காரியம்’ பார்க்கும் மாமாவின் வீட்டில் பசுவும் எருமையும் கலந்து புதிய பாலில் காபி போடுவார்கள். இந்தப் புதிய மணவாழ்வில் வெறும் அன்பையே காபி, டிபன் உல்லாசங்கள் என்று எண்ணி இருக்கவேண்டிய நிலையில் உபசரிப்பு ஆசையை எப்படி நிறைவேற்றப் போகிறாள்? பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து கத்திரிக்கோலினால் வெட்டி எறிந்தாற் போன்று துண்டாடப்பட்டு அவள் வந்த பிறகு, சிறகெல்லாம் ஒடிந்த நிலையில் உறவின் இன்ப ஈரங்களெல்லாம் வற்றிக் கிடக்கும் நிலையில் அபூர்வமாக ஒரு ஈரம் பொசியும் ஊற்றுக் கண்ணாய், உறவுக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் தாய் மாமன். அவருக்கு இனிப்பும் காரமும் காபியும் கொடுத்து