பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

15

சென்று வாளி நீரில் கை கழுவிக்கொண்டு காப்பி குடிக்கிறார். பிறகு மடியிலிருந்து வெற்றிலை பாக்கு சீவல் டப்பாவை எடுத்து வெற்றிலை போட்டுக் கொள்கிறார்.

அவளுக்கு, அவர் எழுந்து போகவேண்டுமே என்று இருக்கிறது. தான் உட்காராமலேயே நிற்கிறாள்.

“அப்ப உங்கக்கா, உனக்கு ஒண்ணுமே கொடுக்கலியா?”

கொடுப்பதா? அக்கா என்ன கொடுத்தாள் அவளுக்கு? புடவைத் தலைப்பைக் கைவிரலில் முறுக்கிக்கொண்டு குற்றவாளியாக நின்ற அவளுக்கு என்ன கொடுத்தாள் அக்கா? அவள் காலடியில் அவளுடைய இரண்டு பாவாடை தாவணி, புடவை ஒன்றும் கொண்ட துணி மூட்டை வந்து விழுந்தது.

வாயிற்படியில் கனலை உமிழும் துர்க்கையாக அக்கா கனகம் நின்றாள்.

“எங்கே வேணாப் போய்ச் சந்தி சிரி. வீட்டுப்படி ஏறக் கூடாது இனிமே!”

துணிமூட்டையை எடுத்துச் சென்று மரத்தடியில் நின்று பிரித்துப் பார்த்தாள். அவளுடைய பழைய பாவாடைகள். புதிய ‘பிங்க்’சோலியும் ஜார்ஜெட் புடவையும் எங்கே?

திரும்பி வந்து அவள் அதைக் கேட்டாள்.

“ஜார்ஜெட் புடவையா? போய்க் கட்டிக்கப் போறியே, அந்த நல்லாம்டயானை வாங்கித்தரச் சொல்லு!” என்று சீறினாள். அந்த மூட்டையை அப்படியே கொண்டு நடக்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. மிகப் பழைய பாவாடை தாவணியைப் போட்டுவிட்டு சேலையையும் உள்பாவாடை ரவிக்கைகளையும் மட்டும் மடித்துச் சுருட்டிக்கொண்டு அந்த வாயிலைக் கடந்து வந்தாள்.

“ஒண்ணுமே தரலே? உங்கம்மாவின் சங்கிலியில் உனக்கு ஒத்தவரியும் ஒரு ஜோடி வளையலும் இருக்குமே? பட்டுப் புடவையில் இரண்டுகூட உன் பங்குக்கு வரணுமேடி? அப்புறம் வயிரத்தோட்டில் பிரிச்ச கல்லு? காது மூக்கு மூளியா, கையில் கழுத்தில், ஒண்ணுமில்லாம, வெறும் கருமணி மாலையும் கண்ணாடி வளையலுமா நிக்கிறியே?”