பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ரோஜா இதழ்கள்

அந்தக் கூட்டத்தின் வேடிக்கை விளையாட்டுப் பேச்சுக்களை அவளைப்போல் மைத்ரேயியால் எப்படி ரசிக்க முடியும் ?

அம்மணியம்மாள் பின்கட்டு வேலையெல்லாம் முடிந்து அங்கே வரும்போது மணி மூன்றடித்து விடுகிறது. கூந்தலை அவிழ்த்து உதறிக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்கிறாள்.

“ஏம்மா ராணி, நீ வெத்திலே போடலே?”

“எனக்குப் பழக்கமில்லே. பின்ன சோறு வேண்டியிருக்காது.”

“எங்களுக்கெல்லாம் வெத்திலே போடாட்டி சோறுண் டாப் போலவே இருக்காது.” என்று துளிர் வெற்றிலையைச் சுண்ணாம்பு தடவித் தடவி மடித்துப் போட்டுக்கொண்டு நாவை நீட்டிவேறு பார்த்துக் கொள்கிறாள்.

முப்பத்தைந்து வயசுக் கைம்பெண் வெற்றிலை போட்டுக் கொண்டு நாவைச் சிவந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது,

இவர்களின் குற்றமில்லை என்று மைத்ரேயி நினைத்துக் கொள்கிறாள்.

“அண்ணனுக்கு நாலு படத்துக்குப் பாட்டெழுதச் சான்ஸ் வருதாம். அடுத்தபடி அண்ணி கழுத்துக்கு நட்சத்திர நெக்லெஸ் வாங்கிப் போடச் சொல்லி இருக்கிறேன்” என்று தெரிவிக்கிறாள் வடிவு.

சாப்பிட்டு வெற்றிலை போட்டுக்கொண்ட அலுப்புத்தீர அம்மணியம்மா அப்படியே சிமிட்டித்தரையில் படுத்துக் கொள்கிறாள். மேலே விசிறி சுழல்கிறது.

“நீயும் படுத்துக்கம்மா, இப்ப இங்க யாரும் வரமாட்டாங்க...” என்று மைத்ரேயியை அவள் உபசரிக்கிறாள்.

“எனக்குப் பகலில் படுத்துறங்கி வழக்கமில்ல” என்று உரைக்கிறாள் மைத்ரேயி,

“எல்லாம் பழக்கமில்ல . பின்ன என்ன செய்யிறது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/50&oldid=1101050" இலிருந்து மீள்விக்கப்பட்டது