பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

உரிமையில் பொருள் எதுவுமில்லை. மனப்பக்குவமே முக்கிய மானது. வேதாந்தம் விளக்கும் அளவில் அந்தணனுக்குரிய செந்தண்மை பூண்டொழுகும் இயல்பைப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆயினும், அத்தகைய நிலையை அடைய மனிதன் முயற்சி செய்யலாம்.

அந்தணன் அருளை மறந்து, பொருளைத் தேடித் தன் உலக இன்பங்களையே பெரிதென்று கருதி, மேலாம் ஞானம் பெறு வதற்கான அறிவையே வணிகச் சரக்காக்கத் தொடங்கும்போதே வீழ்ச்சியுறுகிறான். பாரதம் முழுவதிலும் இந்த நிலை இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் இந்நிலை ஓர் வலுவான அரசியல் மாற்றத்துக்குக் காரணமாக மக்களிடையே வாழ்வில் விளைவித்த பூசல்களையும் சிக்கல்களையும் நான் என்னைச் சுற்றிய வாழ் விலேயே காண நேர்ந்திருக்கிறது. எனவே, செய்தி தேடிக் கொண்டு செல்லவேண்டிய தேவை இல்லாமலேயே இக்கதையை எழுதியுள்ளேன்.

தமிழ் இலக்கியத்தில், வாழ்க்கையின் எல்லாத் துறைகளை யும் பாதிக்கும் இந்த வேற்றுமையைக் குறிப்பிடவே ஓர் நொய்ம் மையான நிலை என் போன்ற படைப்பாளிகளுக்கு இருந்து வந்திருக்கிறது. சாதிகளும், பிரிவுகளும் நம்மிடையே முன்னெப் போதையும்விட வலுவாக நச்சுப் பொருள் வளர்க்கும் ஊனைத் தின்னும் விலங்குகளாக வளர ஊட்டம் பெற்று வருவதே இன்றைய நிலை. இதை எந்தச் சாராரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நான் குறிப்பிடவில்லை. எனினும் இலக்கியம் வாழ்க்கையின் உண்மைகள் என்ற மூலப் பொருளினின்றும் வார்க்கப்பெறும் வார்ப்புகளாகும். குறைகளைச் சுட்டும் எண்ணத் துடன்கூட இந்நவீனத்தை நான் உருவாக்கவில்லை. சிந்திக்கச் செய்யவேண்டும் என்பதே என் நோக்கம். இச்சமுதாயத்தில் நானும் ஓர் பொறுப்பான இடம் பெற்றிருப்பதால் இதைச் சார்ந்த குற்றமும் குறையும் எனக்கும் உரியதேயாகும். தமிழ் வாசகர்கள் இந்நவீனத்தை வரவேற்பார்கள் என்றே எண்ணுகிறேன். இந்தப் படைப்பை, நல்ல முறையில் அச்சிட்டு வெளியிடும் ‘தாகம்’ பதிப்பாளருக்கு என் உளம் கனிந்த நன்றி உரித்தாகிறது.

- ராஜம் கிருஷ்ணன்