பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

61

வாக அமைந்த அழிபோட்ட முன் வாயில் ஐயத்துக்கிடமின்றி, பூட்டப் பெற்றிருக்கிறது. அந்த முன் கூடத்தில் பித்தளைக் குழாய்ப் பளபளக்க ஊஞ்சற்பலகை தொங்குகிறது. அவளுடைய தந்தையின் உல்லாச வாழ்வை நினைப்பூட்ட அவர்களுக்கென்று தங்கிய பொருள் அது ஒன்றுதான். தொங்கும் சங்கிலி தெரியாமல் மூடிக்கொண்டிருக்கும், பித்தளைக் குழாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருக்கும். அதற்கு அத்திம்பேரே மெருகு போடுவது வழக்கம். அதில் அக்காவும் அவரும் உட்கார்ந்திருப்பார்கள். மைத்ரேயி அவர்கள் இல்லாத சமயங்களில்தான் அதில் உட்கார்ந்து ஆடியிருக்கிறாள். சுமதியின் குழந்தைகளும், ரஞ்சனியின் குழந்தைகளும் விடுமுறைக்கு வந்தால் அவள் அவர்களை உட்கார்த்தி வைத்து வேகமாக ஆட்டுவாள். அவளுக்கு அதில் உட்கார்ந்தால் சிறிது நேரத்தில் வயிற்றைப் புரட்டும். அந்த வயிற்றுப்புரட்டல் பழகி, ஊஞ்சற்பலகை ஒத்துப்போக அவளுக்குச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

அவள் கண்மூடித்தனமாகப் படி இடறி விழ ஒரு வாழ்க்கைக்குப் போனாளே, அதுவும் சந்தர்ப்பம் இல்லாமலே போக முடிந்து விட்டது.

அக்காவுக்கு இப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயசிருக்கக்கூடும்... அபூர்வமாக மகப்பேறா? அல்லது.....

‘டில்லிக்காரன்’ கொண்டுபோவான் என்று மாமா கூறியது நினைவுக்கு வருகிறது.

ஆண்டவனே, நல்லபடியா அக்கா பிழைத்து எழுந்து...

“ஏம்மா, மலைச்சு நிக்கறியே? அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது. எதானும் தெய்வதோஷம் தானிருக்கும். இந்தத் தடவை அம்மா தெவசத்துக்கு மங்கிலிப் பொண்டுகள் பண்ணலே, மனசே பிடிக்கலேன்னு சொல்லிண்டிருந்தா. நான் வேண்டிண்டிருக்கேன். பிழைச்சு நல்லபடியா வரட்டும் அப்படீன்னு.... இந்தக் கதவை நாந்தான் பூட்டிண்டு போயிடுங்கோன்னேன். பின்பக்கம் சமையல்கட்டு திறந்திருக்கு ...வா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/63&oldid=1101865" இலிருந்து மீள்விக்கப்பட்டது