பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ரோஜா இதழ்கள்

“வேண்டாம் மாமி, உங்களுக்கு இருக்கும் கஷ்டம் போதாதா? நானுமாகூட?”

“பரவாயில்லே. கூடம் பெரிசாயிருந்து ஒண்ணே ஒண்ணாய் பழகினாத்தான் இன்னொண்ணு வந்தால் தாள முடியாது. ஆறோடு ஏழாக நெருங்க இடமுண்டு, வா, வா...”

ஊட்டமும் வளமும் காணாத முகத்திலே கண்கள் மட்டும் கனிந்து ஒளிருகின்றன. எண்ணெயில்லாத முடிகூட அழகாக இருக்கிறது. இரந்தும், இச்சகம் பேசியும் தானும் வயிறு வளர்த்துக் குடும்பமும் பெருக்கும் மதுரம் மாமி அவளைக் கூப்பிடுகிறாள்.

இவளுக்கு அவளைக் கூப்பிடுவதனால் மதிப்புக் குறைவு கிடையாதோ?

இவள் உடன் பிறவாததாலோ?

தந்தையின் நிலத்தில் விளைந்துவரும் நெல் மூட்டைகள் அடுக்கியிராததால் அழைக்கிறாளோ?

மைத்ரேயியைவிட மதுரம் மாமி எந்தவிதத்தில் தாழ்ந்தவள் ?

அதே உயர்ந்த குலம். மைத்ரேயியைப் போன்ற நிறமில்லை. தோற்றத்தில் அரசகுமாரியில்லை. எஞ்சியிருப்பது மைத்ரேயியிடம் அந்தக் தோற்றம்தான். இருவரும் நடக்கிறார்கள். மதுரம் மாமி முன்னே வழிகாட்ட, பையுடன் நடக்கிறாள். வெயில் சுட்டெரிக்கிறது.

மதுரம்மாமியின் வீடு எங்கே இருக்கிறது?

அது கோயிலுக்கு நேராக உள்ள தெருவில் இருக்கிறதோ? குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருக்கிறதோ? தெரு வாயிற்படியில் நின்று மேற்குலத்துச் செருக்கெரியும் கண்களுடன் ஆணும் பெண்ணுமாக அவளை விழித்துப் பார்த்துச் சொற்களால் குதறி எறிவார்களோ?

அம்மாடி... சந்நிதித் தெருவுக்குத் திரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/74&oldid=1101895" இலிருந்து மீள்விக்கப்பட்டது