பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ரோஜா இதழ்கள்

சாய்க்கப்படுக்கிறாள். “அக்கா, அந்த டிராமா ரொம்ப நன்னாயிருக்காம். கூட்டம் இத்தனை போலீசையும் மீறிண்டு இருக்கணும்னா விசேஷமாத்தானே இருக்கும்? ஏன் போகக் கூடாதுங்கறே? இரத்தக் கண்ணீர் சினிமா கூட வந்திருக்கு, அப்பாவு அன்னிக்கே டிக்கெட் கூட வாங்கித்தந்திருப்பான்...” என்று எந்த சினிமாவுக்கும் நாடகத்துக்கும் போகக்கூடாது என்று தடுக்கும் தமக்கையின் மீது வழக்கம்போல் குறைபாடிப் பொருமுகிறாள்.

“ஆமாண்டி! காங்கிரசையும் பிராமணனையும் சேத்து நாக்கில் நரம்பில்லாம அவன் பேசறானாம். போய் கேட்டு இளிச்சிண்டு நிப்பே!” என்று சாடுகிறாள் தமக்கை.

“அவன் நடக்கிறதைத்தானே சொல்றானாம்? பெரிய காங்கிரஸ். அதைச் சொன்னா உனக்குக் கோபம் வந்துடும்!”

“ஆமாம், எனக்குக் கோபம்தான் வரும். அப்படித்தான் வச்சுக்கோயேன்? காங்கிரஸ் எனக்குப் பெரிசுதான். எனக்கு ஏதானும் ஆபத்து சம்பத்துன்னா லோகநாயகிதான் உதவப் போறாளே ஒழிய, இப்படித் திட்டிக்கொட்டறவா இல்லே!”

“ஆமாம், பெரிய உதவி பண்ணிக் கிழிச்சுட்டா! இப்படி அடிச்சு விரட்டறதுக்கே நாத்தினார் உறவுகொண்டாடு!”

“என்னை ஒருநாளும் லோகா அடிச்சு விரட்ட மாட்டாளாக்கும். இன்னிக்குத் தேதில நான் ராஜாத்திபோல இருந்துப்பேன். எல்லாம் உங்க பந்தங்களாலதான் ஒரு வழியுமில்லாம இருக்கு. அவா பெரிய மனுஷா. வரவா, போறவா நேரு முதல் கொண்டு வந்து போற இடம். இவர் வேணுன்னு அழுக்கு வேஷ்டியைக் கட்டிண்டு வாசல்ல நின்னு வாயில வந்ததைப் பேசலாமா? ஒத்தொத்தன் சொந்தத் தாயாரையே அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு கட்டுப்பாடு பண்றான். அவளுக்கு மதிப்புக் குறைவாக யார் பேசினாலும் தப்புத்தான். அப்படியும் அவ, எப்பவோ தலைமுறை விட்ட! உறவுன்னு இருக்கா? என்னத்துக்குண்ணா இப்படி? ஏன் நீங்க கண்ட கண்ட இடத்திலேயும் வேலை செய்யப் போகணும். வீட்டோடு ரெண்டு பேருமா வந்து இருங்கோன்னு ஜிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/88&oldid=1101931" இலிருந்து மீள்விக்கப்பட்டது