பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ரோஜா இதழ்கள்

போறதுன்னு நம்பர் எழுதி எழுதி எரவாணத்தில் சொருகி வைக்கிறே. போஸ்ட் மாஸ்டர் பெண்டாட்டிக்கு அம்பதும் நூறும் விழறதாம். உனக்கும் விழல, எனக்கும் விழல” என்று குறைபடுகிறாள் சொர்ணம்.

“அவா, அம்பதும் நூறும் கட்டி ஆடறா. நீயும் நானும் ஒண்ணும் ரெண்டும் கட்டினா எப்படி விழும்? எனக்கு ஒரு அம்பது ரூபா விழுந்தா இங்கியே, இட்டிலிக்கடை போட்டுடுவேன். எனக்கு பிழைச்சுக்க முடியும்...” என்று தன் ஆசையை வெளியிடுகிறாள் மதுரம்.

“மஞ்சக்குடியில் சுண்டலும் கைமுறுக்கும் பண்ணிக் குடிக்கும் லோட்டா முதல் தோத்தாச்சு. நீ என் புடவையைக் கொண்டு தொலைச்சதுக்கு இன்னும் பதில் வாங்கித்தரல. அம்மா நினப்பா எனக்குக் குடுத்தது. அது பொறுக்கல உனக்கு. இப்ப இங்கே வந்து மறுபடியும் தொழிலா....?”

“பேசாம இரு. எப்படியும் மைத்ரேயியை அழைச்சிண்டு பட்டணம் போகப் போறேன். பாலாகிட்டக் கேட்டா புடவை எதானும் தருவா” என்று மீண்டும் மைத்ரேயியைப் பார்க்கிறாள் மதுரம்.

“மாமி, லோகநாயகியை உங்களுக்கு நன்னாத் தெரியுமா? என்னை எப்படியேனும் கொண்டு விட்டுடுங்கோ மாமி...”

இப்பவே போகலாம் என்று சொல்லத் துடிக்கிறாள்.

“நான் அப்படி நினைச்சுத்தான் உன்னைக் கூட்டிண்டு வந்திருக்கேன். எங்கியானும் வேலை போட்டுக் குடுப்ப, இந்த சொர்ணத்துக்குப் படிப்பு ஏதானும் இருந்தா எப்பவே போட்டிருப்பேனே? இங்கே ஒண்ணுக்கும் வழியில்ல...”

“உங்களுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருப்பேன் மாமி, தயவுபண்ணி எனக்கு ஒரு வழி காட்டிடுங்கோ ...”

“கட்டாயம். சீனு வரட்டும்..” என்று மதுரம் உறுதி கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/90&oldid=1101934" இலிருந்து மீள்விக்கப்பட்டது