பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ரோஜா இதழ்கள்

யளித்தாளும் அவனுடைய நோக்கு பின்தொடரும் மைத்ரேயியைச் சந்தித்து, ‘யாரோ இவள்’ என்று வியந்து நிற்கிறது.

தனராஜுவிடம் ஆசைக் குடத்தை உடைத்தெறிந்த பிறகு இப்படி யாரேனும் இளைஞன் தன்னைப் பார்ப்பதே அவளுக்கு எண்சாணையும் ஒரு சாணாகக் குறுகச் செய்வதாக இருக்கிறது.

கார் நிற்பதற்காக எழுப்பிய முகப்பில் மேகவண்ணக் காரொன்று நிற்கிறது. அது முன்னும் பின்னும் ஒரே அமைப்பாக நீண்டவடிவு பெற்றிருக்கிறது. தோட்டம் மிக அழகாயமைந்திருக்கிறது. வட்ட வட்டமான புற்றரைகளைச் சுற்றிச் செம்மண் பாதை. பாதைக்கு வரம்பு கட்டினாற்போல் பூச்செடிகள். அடுக்குக் காசித்தும்பை ஜினியாப் பூஞ்செடிகள் மலர்ந்த இதழ்களுடன் காலைப் பொற்குழம்பில் குளித்தெழுந்த பெருமையுடன் சிரிக்கின்றன. ஒரு மூலையில் குடைராட்டினத்துக் குடை வடிவில் மேலேயிருந்து அளவான கூரை வேயப்பெற்ற பர்ணசாலை போன்ற கட்டிடம் கருத்தைக் கவருகிறது.

“அந்த இடத்தில் முன்ன லோகாவின் அப்பா இருந்தார். இப்ப அங்கே லோகாவின் ஆத்துக்காரர் இருக்கார். அவர் ரொம்ப நாள் கிராமத்தில் இருந்தவர். லோகாவுக்கு அப்பா செத்துப்போனப்புறம், இப்பத்தான் கொஞ்ச நாளாக இங்கு வந்திருக்கார்...” என்று மெதுவாகக் கூறுகிறாள் மதுரம்.

மைத்ரேயிக்கு ஒன்றுமே இப்போது கருத்தில் பதியவில்லை.

முன் வாயில் முகப்பைக் கடந்து மதுரம் அவளை வரவேற்பறைக்குக் கூட்டிச் செல்லவில்லை. வீட்டைச் சுற்றிப் பின்புறம் நடக்கிறாள். பெரிய தண்ணீர்த் தொட்டியின் அருகே, வேலைக்காரி பாத்திரங்களைத் துலக்க உட்கார்ந்திருக்கின்றாள். முன்புறத்தளவுக்கு விரிந்த பரப்பில் வாழைத் தோட்டம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. பாத்திரம் துலக்குபவளைப் பார்த்தால் வேலைக்காரியாகத் தோன்றவில்லை. அவளுடைய இடையிலிருக்கும் விலை உயர்ந்த ரக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/92&oldid=1101940" இலிருந்து மீள்விக்கப்பட்டது