பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

93

“இந்தப் பொண்ணு யாரு?”

மைத்ரேயி தலைகுனிய நிற்கிறாள்; இதழ்கள் துடிக்கின்றன.

“இவ...இவ தாயார் தகப்பனார் யாருமில்ல, பாவம். தற்கொலை பண்ணிக்கிறேன்னு கிணத்தண்ட வந்து நின்னா. நான் நல்லவேளையாப் பாத்துக் கூட்டிண்டு வந்தேன். நீங்க பாத்து ஏதானும் செய்யணும் லோகாம்மா...”

லோகநாயகி ஒரு நிலைத்த பார்வையுடன் அவளை ஆராய்கிறாள்.

“ஏம்மா, கிணற்றில் நிறையத் தண்ணீர் இருந்ததா?”

மைத்ரேயியின் விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் சிந்துகின்றன.

“படிச்சிருக்கியா?”

‘ஆம்’ என்பதற்கறிகுறியாக மைத்ரேயி தலையை ஆட்டுகிறாள்.

“எத்தனை கிளாஸ்?”

“எஸ்.எஸ்.எல்.ஸி படிச்சி பரிட்சை எழுதாம நின்னுட்டேன்.”

அவள் அடுத்த கேள்வியைக் கேட்கவொட்டாமல் மதுரம் குறுக்கிடுகிறாள்.

“உங்ககிட்ட ஒப்படச்சிடறேன்னு கூட்டிண்டு வந்தேன். நல்ல குடும்பத்துப் பொண்ணு. நீங்க எங்கியானம் வேலை ஏதானும் போட்டுக்குடுத்தா உபகாரமாக இருக்கும்...”

லோகநாயகி சிரிக்கிறாள்.

“வேலை போட்டுக் கொடுக்கத்தான் கூட்டிண்டு வந்தாயா? அப்ப இங்கே இருக்கட்டும்...” என்று அவள் ஏதோ சொல்ல நாவெடுக்குமுன் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

உள்ளிருந்து மாநிறமாக ஊட்டமுள்ள உடல்வாகைக் குட்டைக்கை ரவிக்கையில் காட்டிக்கொண்டு இளநங்கை ஒருத்தி வருகிறாள்.

புறங்கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/95&oldid=1101948" இலிருந்து மீள்விக்கப்பட்டது