பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

லியோ டால்ஸ்டாயின்

கல்வியும் சுவையூட்ட வில்லை. குழம்பியது மூளை! சஞ்சலமடைந்தது மனம்; அதனால், கற்ற கல்வியே போதும் என்ற மனதோடு கல்வியை அவர் துறந்து விட்டார்.

சிந்தனை சிதறியது; குழம்பியது மூளை, அது மட்டுமல்ல; உடல் நலமும் குன்றியது; எனவே, 1847-ஆம் ஆண்டு நிறுத்தினார் படிப்பை, வெளியேறினார் பல்கலைக் கல்லூரியை விட்டு; போனால் போகட்டும் என்றனர் பல்கலை அதிகாரிகள்; எனவே, முற்றுப் புள்ளியை வைத்துவிட்டார் டால்ஸ்டாய் தனது கல்விக்கு!

இந்த நேரத்தில், டால்ஸ்டாயும், படிப்பை முடித்து விட்ட அவரது மூத்த அண்ணனும் தமது கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள் சரி, என்ன செய்யலாம் என்ற சஞ்சலத்திலே மிதந்தார்கள்.

கிராமத்துக்கு வந்தவர்கள், அங்குள்ள வேளாண் மக்களது நிலையைப் பார்த்து வேதனைப்பட்டார்கள். ஜார் மன்னன் பரம்பரைகளது கொடுங்கோல் கொடூரங்கள், அதிகாரிகளின் அட்டுழியங்கள், சட்டங்களின் சதிராட்டங்கள், இவற்றைப் பொறுக்க முடியாமல் கிராமத்து விவசாயிகள் சொல்லொணா வேதனைகள் அனுபவிப்பதை டால்ஸ்டாய் சகோதரர்கள் பார்த்து பரிதாபமடைந்தார்கள்!

இந்தக் கொடுமையான சூழலையுடைய ருஷ்யாவிலே பஞ்சம். பஞ்சமோ பஞ்சம், சோற்றிக்கும் பஞ்சம், வேலைக்கும் பஞ்சம்; லியோ டால்ஸ்டாய் பிறபகுதிகளில் இக் கூக்குரல்களைக் கேட்டார் என்று கூறுவதைவிட; தனது கிராமப் பகுதியிலேயே நேரிடையாகப் பார்த்து அவர் மனம் கொதித்தார். உடனே கிராம மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய நம்மால் முடியுமா என்று எண்ணமிட்டார்.