பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59

அறிவேன். ஒரு கூர்மையான கொடுவாட் கருவியால் அவன் தலை நறுக்கென்று துண்டிக்கப்பட்டதைப் பார்த்தபோது எனக்குத் தவிப்பாக இருந்தது. அந்தத் தண்டனைக்காகக் கூறப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பயனற்றவை என்று எனக்குத் தோன்றின. நான் வாயை மூடிக் கொண்டு ஊமையாக இருப்பதால் அந்தப் பாவத்தில் நானும் பங்காளி ஆகிவிடுவேன் என்று தோன்றியது.

“அப்போது நான் பார்த்த நேரத்தில் எப்படி இருந்தேனோ அதைப் போலவே இப்போதும் என் மனத்தில் பல எண்ணங்கள் வட்டமிட்டன. வறுமையால் மக்கள் படும் துன்பத்தைப் பார்த்தேன். பசியால் அவர்கள் துடிப்பதையும் கண்டேன்.

ஆடம்பரமான, படாடோபமான சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டதன் வாயிலாக இந்தத் தீமையை வளர்ப்பவர்களில் நானும் ஒருவன் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன்.” என்று நண்பருக்கு எழுதிய கடிததத்தில் ஞானி லியோ டால்ஸ்டாய் மனமுருக, நெஞ்சுருக, எழுதியுள்ளார்.

ஏழை மக்களது வறுமைப் பிரச்னைகளைப் பற்றி ஞானி டால்ஸ்டாய் நன்கு சிந்தனை செய்தார். அது பற்றி அறிவாளிகளுடனும் நண்பர்களுடனும் வாதம் செய்தார். இது குறித்து அவர் பேசும்போது, சில சமயம் பொறுமை இழந்து ஓ வென்று கத்தி விடுவார். ஒரு நாள், அவர் கூச்சலிடுவதைக் கேட்டு உள்ளே இருந்த டால்ஸ்டாய் மனைவி பஹேர் ஓடிவந்து என்ன நடந்தது என்று கவனித்தாள்.

“நான் இப்படி வாழக்கூடாது, நான் இப்படி வாழக்கூடாது, இந்த மாதிரி வாழ்வதை நிறுத்த வேண்டும்.” என்று டால்ஸ்டாய் பெருங்கூச்சலிடுவதை அவரது மனைவி கேட்டாள். உடனே அவரை அடக்கிவிட்டு மனைவி உள்ளே சென்றாள்.