பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67

பாழானதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பரிதவித்தார்கள்! எனவே, பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கு எப்படித் தொண்டு செய்யலாம் என்று அவர் இரவும் பகலுமாய் யோசனை செய்தார்.

ஊர் ஊராகச் சென்ற டால்ஸ்டாய்; மக்களை எச்சரிக்கையோடு இருக்கும்படி எச்சரித்தார். பஞ்சத்தில் துன்புறுவோருக்குப் பணக்காரர்களை, தொழில் முதலாளிகளை உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பத்திரிக்கைகளுக்கு கிராம மக்கள் நிலைகளை எல்லாம் விளக்கிச் செய்திகளைத் தொகுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்த அறுவடைக் காலத்தில் எந்த விவசாயியும் அறுவடை ஏதும் செய்ய முடியாத காரணங்களை ஜார் அரசுக்கும் அறிக்கை வாயிலாக எடுத்துரைத்தார்! அதே நேரத்தில் மற்றவர்களுடைய உதவிகளையே எதிர்பார்த்துக் கொண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தானாகவே - தனியாகவே தனது நிவாரண வேலையை அவர் தொடர்ந்தார்.

டால்ஸ்டாய் தான் வாழும் ‘ரேயசா’ என்ற பகுதியில் பஞ்சத்தின் கோரம் மிகவும் மோசமாகத் தாண்டவமாடுவதை அறிந்தார். அங்கே சென்று மிக அதிகமாக வேலை செய்தாக வேண்டுமென்ற அக்கறையால் தனது மகள்கள் இருவரையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு ரேயசா பகுதியிலே உள்ள கிராமங்களுக்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அவரிடம் கையிருப்பாக எழுநூற்றைம்பது ரூபிள்தான் இருந்தது. அந்த ரூபாயை வைத்துக் கொண்டு என்னென்ன செய்யலாமோ அவற்றையெல்லாம் தனது சக்திக்கேற்றவாறு அவர் செய்துவந்தார். மக்களிடம் அவர் சேகரித்த தானிய வகைகளைப் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குப் பங்கீடு செய்தார்.