பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

லியோ டால்ஸ்டாயின்

நிவாரணப் பணிப் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டால்ஸ்டாயின் ஏழைபங்காளக் கருணையுள்ளத்தைப் பாராட்டினார்கள் என்பது, வரலாறு காணாத சம்பவமாகும்.

மனித நேய மகானான டால்ஸ்டாய், பஞ்ச நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நெருக்கடி நேரத்திலும் ஓய்வு நேரம் ஒதுக்கி, ‘சொர்க்க சாம்ராஜ்யம்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். ரேயசா நகர்ப் பகுதிப் பஞ்சத்தை ருஷ்ய அரசு கண்டும் காணாதபடி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த ஊமைச் செயலை, டால்ஸ்டாய் அந்த நூலிலே மிக வன்மையாகக் கண்டித்தார்.

இந்த ‘சொர்க்க சாம்ராஜ்ய’த்தைப் படித்த ஜார் ஆட்சி, டால்ஸ்டாய் மீது பெருங் கோபம் கொண்டது. இரஷ்யாவிலே உள்ள புத்தக விற்பனைக் கடைகளிலே எல்லாம் போலீசார் புகுந்து அராஜகம் செய்து ‘சொர்க்க சாமாராஜ்ய’ புத்தகங்களைப் பறிமுதல் செய்தார்கள்! பொது மக்கள் அந்த நூலைப் படிக்கக் கூடாது என்று தடை விதித்தது ஜார் மன்னனது செங்கோல்! இதனால் ரஷ்ய மக்கள் பரபரப் படைந்தார்கள்.

டால்ஸ்டாய் தனது நூல் பறிமுதல் செய்யப்பட்டதையும், யாரும் அவரின் அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கூடாது என்று ஜார் கொடுங்ககோல் ஆட்சி தடைபோட்டதைப் பற்றியும் பதில் ஏதும் கூறாமல் வாயையும் திறக்காமலே இருந்ததுடன், மேலும் சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் பரபரப்பாகவும், லட்சக்கணக்காகவும் விற்பனை ஆயின என்பது; டால்ஸ்டாயின் ஜார் ஆட்சிக் கொடுங்கோல் எதிர்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.