பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73

அவர்கள் பொறுமையாக அவற்றைப் பொறுத்துக் கொண்ட வீரத்தையும் கேட்டு உள்ளம் உருகினார் மனம் நொந்தார். இது என்ன ஆட்சிதானா? என்று அறிக்கையும் விடுத்தார். அதனால் அவர்களுக்கு என்ன உதவிகளைச் செய்யலாம் என்று சிந்தித்தார்

இதற்குக் காரணம் என்னவெனில், ஆண்டவனோடு போராடுவோர் குழுவின் கொள்கையும், டால்ஸ்டாய் லட்சியமும் ஒத்திருந்தன. அதனால் அந்த இனத்தை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் திட்டமிட்டபடியே இறங்கிப் பணியாற்றலானார்.

ருஷ்யக் காடுகளிலே இந்த ஆண்டவனோடு போராடும் இனம் வாழ வேண்டும் என்று ஜார் உத்தரவிட்டான். அந்த ஆணையை அவன் மீண்டும் வெளியிட்ட பிறகுதான் டால்ஸ்டாய் கிளர்ச்சியிலே ஈடுபட்டார்.

வேண்டுகோள் ஒன்றைப் பத்திரிகைகளுக்கு அவர் விடுத்தார். அதில் ருஷ்ய நாட்டின் கல்வியாளர்கள், பிரபுக்கள் போன்றோர் பலர் கையொப்பம் செய்தார்கள்.

யார்யார் டால்ஸ்டாய் அறிக்கையிலே கையொப்ப மிட்டார்களோ அவர்களை அரசு பயமுறுத்தியது; பலரை வலியப் பிடித்து இழுத்துவந்து நாடு கடத்தியது; வேறு சிலரை சித்ரவதை செய்தது. ஆனாலும், டால்ஸ்டாய் இக் கொடுமைகளைக் கண்டு சிறிதும் அச்சப்படாமல், தனது பணிகளைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினார்! அதனால் மக்கள் இடையே கிளர்ச்சி எழுந்தது; வலுத்தது; மக்களிடையே பரவியது. இம் மக்கள் கிளர்ச்சி ஒருவகையில் வெற்றிகரமாக முடிந்தது.

‘ஆண்டவனோடு போராடுவோர்’ வெளி நாடுகளுக்கும் குறிப்பாக கனடா நாட்டுக்கும் சென்று வாழ வேண்டும் என்று ருஷ்ய ஆட்சி ஆணையிட்டது; அதற்கு ஏற்றவாறு அனுமதியையும் வழங்கியது.