பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

89

வைத்துக் கொள். இந்த பெயர் நம் இருவருக்கு மட்டும் தெரியுமே தவிர, வேறு யாருக்கும் இது தெரியக்கூடாது.”

டால்ஸ்டாய் 1910-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பத்தாம் நாள் தனது வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்து விட்டார். அன்று விடியலில் எழுந்தார். பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் அவசரமாகச் செய்தார். முதலில் தனது மனைவிக்கு ஒரு கடிதத்தை வரைந்தார்.

“சோன்யா, நான் உன்னை விட்டுப் பிரிவதால் உனக்கு வேதனையாகவே இருக்கும்” என்பதை நினைக்க எனக்குக் கவலையாகவே இருக்கிறது. என் செய்ய? இதற்கு மாறாக என்னணவோ, நம்பவோ, செய்யவோ என்னால் ஏதும் முடியவில்லை. வீட்டில் எனது நிலை பொறுக்க முடியாததாகிவிட்டது.”

“இதுவரை வாழ்ந்து வந்த போக வாழ்க்கையை நான் இனியும் பின்பற்ற இயலாது. என்னை யொத்த வயதுடைய கிழவர்கள், சாதாரணமாகச் செய்யக் கூடிய அதே காரியத்தை நானும் செய்கிறேன். அதாவது, உலக வாழ்க்கையை விடுத்து நான் விலகிப் போகிறேன் எனது மீதி நாட்களை அமைதியாகக் கழிக்க எண்ணுகிறேன்.”

“அன்பு கூர்ந்து எனது கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள். நான் இருக்கும் இடம் தெரிந்தாலும், நீ என்னிடம் எக் காரணம் கொண்டும் வர வேண்டாம். அப்படி நீ வந்தால், உனக்கும் எனக்கும் உள்ள ஒட்டும் உறவும் மிக இழிவானதாகி விடும். எனது லட்சியத்தை எவருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க இணங்கேன்.”

‘என்னோடு மனைவியாக, இல்லத்தரசியாக, முறையாக நாற்பத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கையை நடத்தியதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னித்துவிடு. அதனைப் போலவே என்னிடம் குறைகள்