பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

93

அவர் தனக்கிருந்த உணர்வுகளுக்கு ஏற்றவாறு மென்மையாகப் பேசிக் கொண்டே இருந்தார்.

உலக நாடுகளில் இருந்தும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் இருந்தும் நாள்தோறும் தனக்கு வந்து கொண்டிருந்த கடிதங்களைப் படிக்கச் சொல்லிக்கேட்டுக் கொண்டிருக்கும் அவரது பழக்கம் சில நாட்களாக இல்லாததால் மனவேதனையடைந்தார்.

ஞான மகான் லியோ டால்ஸ்டாய், தான் இறக்கும் வரை, ஏதோ ஒன்றிரண்டு அபாய, உணர்ச்சியற்ற நாட்கள் போக, மற்ற நாட்கள் வரை, தனது நாட் குறிப்பு எழுதும் பழக்கத்தை தவறாமல் செய்து வந்தார்.

“உலகில் இருப்பவையாவும், இயங்குபவை எல்லாமே நன்மைக்காகவே இருக்கின்றன. இதனால், எனக்கும் நன்மை, மற்ற எல்லாருக்கும் நன்மை” என்ற தத்துவச் சொற்றொடர்களைத் தனது நாட்குறிப்பின் இறுதி நாள் அவர் எழுதி வைத்துக் கொண்டு இருக்கும்போதே அவரது கை பற்றியிருந்த எழுதுகோல் ஒரு புறமும், நாட்குறிப்பு மற்றோர் புறமுமாக நழுவி விழுந்துகிடந்தன. ஆம்; ஞானி டால்ஸ்டாய் உயிர் அவரை அறியாமலேயே பிரிந்து சென்றுவிட்டது!

லியோ டால்ஸ்டாய் என்ற நிலா மறைந்து விட்டது. ஆனால் அவரது பொது மக்கள் தொண்டு என்ற ஒளி இன்றும் உலகில் பரவிக் கொண்டே இருளில் செல்லும் வாழ்க்கைப் பயணிக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றது.

‘நல்லவனாக இரு’, என்று அவரைக் காணவந்த எல்லாருக்கும் ஒரு வேத வாக்காக டால்ஸ்டாய் கூறினார்!