உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

வஸந்தமல்லிகா

அத்தகைய விஷயங்களில் புருஷரைக் காட்டிலும் பெண்டிருக்குப் புத்திக்கூர்மை அதிகமாதலால், அவர் கேட்ட கேள்வியாலும், அவரது பதறிய தோற்றம் படபடத்த சொற்கள் முதலியவற்றாலும் அவர்கள் உண்மையில் மணந்த புருஷர் பெண்ஜாதி தானோ என்ற பெருத்த சந்தேகம் உதித்தது. ஆனால் அவள் ஒன்றையும் அறியாதவளைப்போல நடித்து "ஒருவரும் வரவில்லையே!" என்றாள்.

“உள்ளே இருந்த என்னுடைய ஸம்சாரம் எங்கே போனாள் உனக்குத் தெரியுமா?" என்றார் ஜெமீந்தார்.

"ஐயோ! எனக்குத் தெரியாதே! பாயி அம்மாள் இப்போது வீட்டில் இல்லையா? நன்றாய்த் தேடிப் பார்த்தீர்களா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் வேலைக்காரி.

அதற்கு மேல் அவளுடன் விவரமாக விஸ்தரித்துப் பேசுவதில் எவ்விதமான பயனுமில்லையென்று எண்ணிய வஸந்தராவ், "சரி; அவள் தன்னுடைய சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருக்கலாம். நான் வெளியில் போய்விட்டு அரை நாழிகையில் வருகிறேன். அதற்குள் அவள் வந்தால், வீட்டை விட்டு எங்கும் போகாமல் இருக்கும்படி நான் சொன்னதாகத் தெரிவி" என்ற சொல்லிவிட்டு ஊருக்குள் நடந்தார்; அவள் எங்கே போயிருப்பாள், அவளுக்குத் தெரிந்தவர்கள் அந்த ஊரில் யாரிருக்கிறார்கள் என்று பலவாறு யோசனை செய்து வருந்திய வண்ணம் விசையாக நடந்து ஊரெல்லாம் அலைந்து கடைசியாகத் தமது சர்வாதிகாரியிடம் போனால் அவன், அதைப்பற்றி தக்க யோசனை ஏதாவது சொல்லுவானென்று நினைத்து அவனது வீட்டிற்கு வந்து, முன் கூறப்பட்டபடி கதவை இடித்தார். அவன் கதவைத் திறக்க, அவர் உள்ளே நழைந்து, "என்னை யாராவது தேடிக்கொண்டு இங்கே வந்தார்களா?" என்று திடீரென்று கேட்டார்.

அவரது பதறிய தோற்றத்தையும் தடுமாறிய மொழியையும் கண்டு வியப்படைந்த ஸகாராம்ராவ், "ஒருவரும் வரவில்லையே! வருவதாக யாராவது சொல்லியிருந்தார்களா?" என்றான்.

"ஆம்-இல்லை" என்று குழம்பிய மனத்தோடு வேறிடத்தில் தமது நினைவை வைத்துக் கொண்டே வஸந்தராவ் மறுமொழி கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/100&oldid=1231392" இலிருந்து மீள்விக்கப்பட்டது