பக்கம்:வசந்த மல்லிகா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவனும் கூத்தியும்

91

தாகத் தோன்றுகிறது. கவலைப்படாதே, நாங்கள் அன்னியர்கள் என்று நினைக்காதே; நீயும் என்னைப்போல ஒரு ஸ்திரீயல்லவா. உனக்கு வந்த துன்பம் எனக்கு வந்ததல்லவா. நீ இனிமேல் எங்கும் போக வேண்டாம்; எங்களுடனேயே இருந்து விடு" என்று அன்பொழுகக் கூறினாள். அதைக்கேட்ட மல்லிகா நன்றியறிவின் பெருக்கும் இன்பமும் அடைந்தவளாய், "அம்மா இவ்வளவு அன்புக்கு நான் எப்படி அருகமானேன்? இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! இந்த உலகில் எனக்கு உற்றோர் பெற்றோர் ஒருவருமில்லை. அநாதையான என்னை இவ்வளவு அன்போடு யார் உபசரிக்கப் போகிறார்கள்" என்று வாய குழற உரை தடுமாற உருக்கமாகக் கூற, அப்போது அவளது கண்களினின்று கண்ணிர் தாரைதாரையாகப் பெருகி வழிந்தது. அதைக் கண்டு சகியாத கிருஷ்ணவேணி அவளை அன்போடு அனைத்துக்கொண்டு மல்லிகா ஏதோ பல விசனங்களால் புண்படும் மனத்துடன் இருப்பதாக அறிந்து அவளை மேலும் பல பல கேள்விகளால் வருத்துவது பாவமென்று நினைத்து தன்னைப் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கத் தொடங்கினாள். "அம்மா! நீ இனி கவலையென்பதையே விட்டுவிடு; உனக்கு யாதொரு குறைவுமில்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஏராளமான ஐசுவரியமில்லாவிட்டாலும், நானும் அதோ நிற்கும் என் பிதாவும் சம்பாதிக்கும் பொருள் நாங்களும் இன்னும் பலரும் நிரம்பவும் செளக்கியமாகக் காலம் கழிக்க போதுமானதாக இருக்கிறது. ஆகையால், நீயும் இருப்பதைப் பற்றி எங்களுக்குச் சந்தோஷமேயொழிய அதைப்பற்றி சிறிதும் கவலையே இல்லை. இறந்து போன நமது ராஜாவின் பட்டமகிக்ஷிகளான பாயிஸாகேப்புகள், பூனா தேசத்திலிருந்து எங்களை வருவித்து தங்கள் அரண்மனைக்குள் நாடகம் (Drama) நடத்தும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்ற ஆறுமாச காலமாக நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் என் தகப்பனார் சித்திர வேலை செய்கிறவர். படுதாக்கள், பதுமைகள், வேஷங்களுக்கு வேண்டிய முகங்கள் முதலியவற்றைச் செய்வதில் இவர் நிரம்பவும் கைதேர்ந்தவர். அங்கே நடிப்பவர்களுள் நானும் ஒருத்தி" என்றாள். அவளது கடைசி வாக்கியத்தைக் கேட்ட மல்லிகா திடுக்கிட்டாள். தான் ஒரு தாசியின் வீட்டிற்கு வந்து சேர நேர்ந்ததை நினைத்து மல்லிகா வருந்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/109&oldid=1231411" இலிருந்து மீள்விக்கப்பட்டது