12-வது அதிகாரம்
இந்திரசபா
மல்லிகா அன்றிரவு நெடும்நேரம் வரையில் நித்திரையின்றி விழித்துக் கொண்டிருந்தாள். அவளது தேகம் விவரிக்க இயலா வகையில் களைப்படைந்து தளர்வெய்தி இருந்ததாயினும், கிருஷ்ணவேணி அவளுக்குச் செய்த அன்புமயமான சைத்யோபசாரங்கள் மனதிற்கு எவ்வளவோ ஆறுதலுண்டாக்கக் கூடியனவாயிருந்தும், அங்கு கிடைத்த செளகரியமான போஜனம், சயனம் முதலியவை அவளது தேகத்திற்கு எவ்வளவோ இன்பகரமானதாயிருந்தும், அவள் தனது பரிதாபகரமான ஆதரவற்ற நிலைமையையும், தனது எண்ணங்களெல்லாம் ஒரு நொடியில் மண்ணாய்ப்போகத் தனக்கு ஏற்பட்ட மாறுபாட்டையும் நினைத்து நினைத்து துயரக் கடலில் ஆழ்ந்திருந்தமையால், பலவகைப்பட்ட மனவெழுச்சியால் நெடுநேரம் சென்றது; கடைசியில் அவளது கண்ணிமைகள் சோர்வினால் தாமே இறுக மூடிக் கொள்ளத் தொடங்கின. சில நிமிஷங்களில் துயிலும் தோன்றி அவளை மேற்கொண்டது. அன்றிரவு முழுவதும் கனவு முதலிய எத்தகைய சலனமுமில்லாமல் அவள் கடுந்துயிலில் ஆழ்ந்தாள்.
மறுநாட் காலையில் அவள் விழித்துக் கொண்டபோது சூரியன் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு மல்லிகா பெரிதும் வெட்கமடைந்தாள். பிறர் தன்னைக் கண்டு ஏளனம் செய்வார்களோவென்ற அச்சங் கொண்டவளாய் அவள் எழுந்திருக்க முயன்றாள். தேகத்தில் நோவும் சோர்வும் நிறைந்திருந்தமையால், அவள் தனது நினைவின்படி தேகத்தை அசைக்கக் கூடவில்லை என்றாலும், கடுமுயற்சி செய்து விரைந்து எழுந்து தனது உடைகளைச் சீர்திருத்திக் கொண்டாள். இனி தான் எவ்விடத்திற்குப் போவது, என்ன தொழிற் செய்வது என்னும் எண்ணங்கள் அவளது மனதில் உதித்தன. உலக அநுபவமறியாத அநாதையான அந்த யெளவன மங்கை அவ்விஷயங்களைப்பற்றி