உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திரசபா

95

மிகுந்த திறமையாகவும், வர்ணங்களைச் சேதம் செய்யாமலும், கை, உடைகள் முதலியவற்றில் அற்ப மாசும் ஏற்படாமலும், அந்த வேலையைச் செய்து முடித்தாள். அதைக் கண்ட கிருஷ்ணவேணியும் அவளது தகப்பனும் பெரிதும் வியப்படைந்தனர். கிருஷ்ணவேணி, "நாம் தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்கிறோம். இவள் கண்ணால் பார்த்தவுடனே கையால் செய்து விட்டாளே இவளல்லவா புத்திசாலி!” என்று வியந்து கூற, அவளது தகப்பன், "ஆம்; இவள் மிகவும் சீக்கிரத்தில் இந்த வேலையில் சாமர்த்தியசாலியாகிவிடுவாள்; சந்தேகமில்லை" என்று கூற, அவ்வாறு கொண்டாப்பட்ட மல்லிகா, வெட்கமடைந்தவளாய், "நான் செய்வது நன்றாக இல்லையென்று பரிகாசம் செய்கிறீர்கள் போலிருக்கிறது?" என்றாள். "இல்லை இல்லை; நாங்கள் உண்மையாகவே பேசுகிறோம்" என்றான் அந்த மனிதன். அவ்விதம் சம்பாஷணை நடந்த சமயத்தில் கிருஷ்ணவேணி எதையோ நினைத்துக் கொண்டவளைப்போல திடுக்கிட்டெழுந்து, "அப்பா! நான் சுத்தமாக மறந்து விட்டேன். இன்று காலையில் நாடகத்தை ஒத்திகை பார்க்க வேண்டுமென்பது ஏற்பாடு. நான் போக வேண்டும். போய்விட்டு அதிசீக்கிரம் வந்து விடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே தனது வெள்ளைத் துப்பட்டியை எடுத்து சிரம் முதல் கால்வரையில் தன்னை மூடிக்கொண்டவளாய் மல்லிகாவைப் பார்த்து, "மல்லிகா! நீயும் வருகிறாயா? அவ்விடத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு சீக்கிரமாக வந்து விடலாம்" என்றாள். மல்லிகா தெருவிலும், ஜனங்களுக்கு மத்தியிலும் போக வேண்டுமேயென்னும் எண்ணத்தினால் சிறிது பின்வாங்கினாளேனும், கிருஷ்ணவேணியின் விருப்பத்திற்கு விடை தர எண்ணாதவளாய், வருகிறேனென்று தலையை அசைத்தாள். அவள் அரை மனதோடு ஒப்புக் கொண்டதைக் கண்ட கிருஷ்ணவேணி, "உனக்கு மனமில்லாவிட்டால் வர வேண்டாம். நீ வந்தால் அது எனக்கு துணையாயிருக்கும். வேடிக்கையாகப் போய்விட்டு வரலாமே என்று சொன்னேன்; வேறொன்றுமில்லை. நீ இங்கேயே சுகமாக இரு. நான் போய்விட்டு அதி சீக்கிரத்தில் வந்து விடுகிறேன்" என்று கூறியவண்ணம் புறப்பட்டாள். உடனே மல்லிகா, "இரு இரு; இதோ நானும் வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து, தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/113&oldid=1231934" இலிருந்து மீள்விக்கப்பட்டது