96
வஸந்தமல்லிகா
அவள் முதல் நாளிரவில் கொடுத்த துப்பட்டியை எடுத்துத் தனது தேகத்தை நன்றாக மூடிக்கொண்டு புறப்பட, இருவரும் வெளியில் வந்தார்கள்.
அவ்வாறு நடந்து அரைநாழிகையில் அவர்கள் தஞ்சை வடக்கு வீதியிலிருந்து ஒரு பெருத்த மாளிகையின் வாசலையடைந்தனர். கிருஷ்ணவேணி, "இந்த மாளிகை அரண்மனையைச் சேர்ந்தது. இதற்குள்ளேதான் ஒத்திகை நடப்பது வழக்கம். மற்றவர்களும் வந்திருப்பார்கள். வா உள்ளே போகலாம்" என்று சொல்ல, அவள் முன்னும் மல்லிகா பின்னுமாக இருவரும் உள்ளே நழைந்தனர்; அநேக வாசல்கள் தாழ்வாரங்கள் கூடங்கள் முதலியவற்றைக் கடந்து கடைசியாக ஒரு பெருத்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த இடம் நாடகக் கொட்டகையைப் போலவே படுதாக்கள் முதலியவற்றால் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தது. அங்கு பல யெளவன ஸ்திரீகளும் வயதான சில புருஷரும் மூலைக்குச் சிலராக நின்று குதூகலமாய்ப் பேசி நகைத்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட கிருஷ்ணவேணி தமது உபாத்தியாயர் (சூத்திரதார்) இன்னமும் வரவில்லையென்று ஊகித்துக் கொண்டவளாய் மல்லிகாவாவைப் பார்த்து, "அதோ உயரமாக நிற்கிறாளே, அவளுடைய பெயர் தமயந்திபாயி; அவள்தான் முக்கியமான ஸ்திரி வேஷம் போட்டுக் கொள்பவள். இப்போது நாங்கள் இந்திர சபா என்னும் நாட்கத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம். அதில் அவள்தான் ஊர்வசியாக நடிக்கப் போகிறாள். அவளைப்போல எவரும் நடிக்க முடியாதென்பது ஜனங்களின் அபிப்ராயம். அதோ அநேக தடித்த தேகத்துடன் நிற்கிறாளே, அவள்தான் சந்தனு மகாராஜனாய், நடிக்கப் போகிறாள் என்று சொல்லிக்கொண்டே அவர்களுக்கருகில், மல்லிகாவுடன் நெருங்கினாள். அங்கிருந்தோர் அனைவரும், புதிதாக வந்த மல்லிகாவைப் பார்த்து வியப்படைந்து அவள் யாவளென்பதை அறிந்து கொள்ள ஆவல் கொண்டு கிருஷ்ணவேணியிடம் வந்து அளவைச் சூழ்ந்து கொண்டனர். அந்த சமயத்தில் உபாத்தியாயர் கோவிந்தசாமி ராவ் என்பவர் கனைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். அவரது கனைப்பைக் கேட்ட அனைவரும் மந்திரவாதியின் மாத்திரைக் கோலைக் கண்டு, நாகம் தனது படத்தை மூடிக் கொண்டு கீழே வீழ்ந்து விடுவதைப்போல தத்தம் இடத்திற்குப் போய் ஒடுங்கி நின்றனர்.