இந்திரசபா
97
அவர், நன்றாக உயர்ந்து தடித்த கம்பீரமான சிவந்த அழகிய தேகத்தையும், பரந்த முகத்தையும் பெற்றவர். அவர் பார்வையிலேயே, பலரை அடக்கி ஆளக்கூடியவர் என்னும் ஒருவித மேன்மை அவரிடத்தில் நன்றாக விளங்கியது. அவரே தென்னிந்தியாவில் நாடகத்தை (டிராமாவை) நாகரிகமான முறையில் முதன் முதலாக ஆரம்பம் செய்தவர். அவரது புகழைப் பற்றி அறியாதவர் எவருமில்லை. ஆதலால், அவரைக் குறித்து விரிவாக எழுதுதல் மிகையாகும்.
அவர் தோன்றியவுடன் அவர்களை நோக்கி, "என்ன! எல்லாரும் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! நாடகம் இன்னம் இரண்டு வருஷமிருக்கிறதென்று எண்ணமோ? இன்னம் இரண்டு வாரங்கூட இல்லையே! பாடங்களைப் படிக்காமல் இப்படித்தானா விளையாடுகிறது? எல்லாரும் வாருங்கள்" என்றார். அதைக் கேட்ட யாவரும் ஒருவகையான அச்சத்தையடைந்தவர்களாய்த் திரைக்குட் சென்றனர். கிருஷ்ணவேணி, "மல்லிகா நீ இங்கேயே இரு. நான் இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே நடந்தாள். உள்ளே ஹார்மோனிய வாத்தியத்தின் ஒலி மிக்க இனிமையாக எழுந்தது; திரை உயர்த்தப்பட்டது. இந்திரனது சபையில் அரம்பை மேனகை திலோத்தமை முதலியோர் நாட்டியம் செய்து சம்பாஷிக்க ஆரம்பித்தனர். அப்போது, "ஊர்வசியைக் காணோமே! அழைத்து வாருங்கள்" என்று இந்திரன் ஆக்ஞாபிக்க, ஒரு கந்தருவன் அவளை அழைத்துவரப் போகிறான். உடனே திரை விடப்படுகிறது. அடுத்த காட்சியில் ஆகாயத்திலிருந்து விடுபட்ட சில கம்பிகளின் வழியாக ஊர்வசி கீழே பூலோகத்தில் இறங்கி சந்தனு மகாராஜனிருந்த காட்டிற்கு வருவது காட்டப்பட்டது; பிறகு வேறு பல காட்சிகள் நடித்து காட்டப் பெற்றவுடன் ஒத்திகை முடிவடைந்தது. இரண்டொரு நிமிஷத்தில் கிருஷ்ணவேணி மல்லிகாவினிடம் வந்து சேர்ந்து, "ஆய்விட்டது; வா போவோம்" என்று கூறி அவள்ை அழைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள். வாசற் கதவண்டை வந்தபோது கிருஷ்ணவேணி திடீரென்று நின்றாள். அதைக் கண்ட மல்லிகா, "என்ன விசேஷம்?" என்று கேட்க, அவள், "அதோ ஒரு புருஷன் நிற்கிறானே. அவனைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை"
வ.ம.-8