மல்லிகாவின் பிணம்
101
அவனிடத்தில் கொடுக்க, அவன் அதைப் பெற்றுக்கொண்டு உள்ளே போய் வல்லம், மகார் நோம்புச் சாவடி, கருந்தட்டான்குடி, வெண்ணாற்றங்கரை, திருவையாறு முதலிய ஊர்ப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அந்த சங்கதியை டெலிபோன் மூலமாகத் தெரிவித்தான். உடனே கருந்தட்டாங்குடியிலிருந்து கிடைத்த மறுமொழியை அவன் ஒரு காகிதத்தில் எழுதி அன்த் இன்ஸ்பெக்டரிடம் கொணர்ந்து கொடுத்தான்.
அதை வாசித்த நாடார், "ஐயா! நீர் உடனே கருந்தட்டான்குடி ஸ்டேஷனுக்குப் போம்; அவசரம்; இங்கே தாமதிக்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே போய் விட்டார். தான் நிரம்பவும் விசனப்படுவதாக நடித்த பீமராவ் உடனே புறப்பட்டு கருந்தட்டான்குடிக்குப் போய் அங்கிருந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் அப்துல் ஹை ஸாயப்புவைக் கண்டு, விவரத்தை அவரிடம் தெரிவித்தான். அதைக் கேட்ட சாயப்பு அதிக விசனத்தோடு உள்ளே போய் அங்கிருந்த நனைந்த சால்வையொன்றைக் கொணர்ந்து காட்டினார். அதைக் கண்ட பீமராவ், "ஐயோ! இது என் தங்கையின் போர்வையல்லவா இது எங்கே அகப்பட்டது. இவள் இப்போது எங்கே இருக்கிறாள்? நேற்று முதல் அவளைக் காணாமல் நானும் என் குடும்பத்தாரும் தவிக்கும் தவிப்பு சுவாமிக்கே தெரிய வேண்டும். என் மனம் பதைக்கிறது? சீக்கிரம் தெரிவியுங்கள்" என்றான். அதைக் கேட்ட ஹை சாயப்பு மிகுந்த விசனத்தோடு, 'ஐயா! நீங்கள் அந்தப் பெண்ணை ஏதாவது வருத்தினர்களா?" என்றார்.
"அப்படியொன்றுமில்லையே! என்ன விஷயம்?" என்றான் பீமராவ்.
"சரி; எப்படி இருந்தாலென்ன. காரியம் மிஞ்சிப் போய் விட்டது. நேற்று சாயங்காலம் இந்தப் பெண் ஆற்றில் விழப் போனதை போலீஸ் சேவகன் ஒருவன் தடுத்தான். அப்போது அவளுடைய உடம்பிலிருந்த இந்தச் சால்வை மாத்திரம் ஆற்றில் விழுந்தது. அதை அவன் எடுத்து வந்தான். அதற்குள் அந்தப் பெண் எங்கேயோ போய்விட்டாள். நேற்றிரவு 12 மணிக்கு அவளுடைய பிணம் படித்துறையில் ஒதுங்கியிருந்ததைக் கண்டு பிடித்தோம். உடனே அதை எடுத்து தஞ்சை சர்க்கார் வைத்திய சாலைக்கு (ஜெனரல் ஆஸ்பிடலுக்கு) அனுப்பினோம்" என்றார்.