உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14-வது அதிகாரம்

பிணமும் பித்தரும்

ல்லிகா எங்கு போய்விட்டாளோ, அவளுக்கு என்ன துன்பம் சம்பவித்ததோ என்ற நினைவினாலும், மன வேதனையினாலும் தமது ஆசையெல்லாம் நிராசையாயொழிந்து போனதேயென்ற விசனத்தினாலும் நிரம்பவும் தளர்வடைந்து வருந்தியவராய், செய்வது இன்னது என்பதை அறியாதவராய் வஸந்தராவ் பைத்தியம் கொண்டவரைப் போலானார். ஒரு நிமிஷ நேரமும் சும்மாவிராமல் அவர் அங்கும் இங்கும் அலைந்தோடி அவளைத் தேடினார். விஷம் தலைக்கேறுவதைப்போல, ஒவ்வொரு நொடியிலும் அவரது வியாகுலமும், வேதனையும், ஆவலும் மலைபோலப் பெருகின. மல்லிகா காணாமற் போன பிறகு அவர் ஜலபானமும் செய்தவரல்லர். அன்றிரவு முற்றிலும் நித்திரையென்பதே கொள்ளாமல், ஊர் முழுவதும் அலைந்து திரிந்ததால், அவரது மிருதுவான மேனி சோர்வடைய, தலை சுழல, கண்கள் இருண்டன. அத்தகைய பரிதாபகரமான நிலை மையில், அவர் ஸகாராம்ராவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கிழவனது முகத்தை உற்று நோக்கியவண்ணம் , "ஏதாவது சங்கதி தெரிந்ததா? உம்முடைய முகக்குறியிலிருந்து ஏதோ விசேஷம் இருப்பதாகத் தெரிகிறது. சீக்கிரம் தெரிவியும். நல்லாதாயிருந்தாலும் சரி, கெட்டதாயிருந்தாலும் சரி" என்றார் வஸந்தராவ். அவரது பரிதாபகரமான நிலைமையைக் கண்ட சர்வாதிகாரி பெரிதும் அச்சங் கொண்டவனாய், "பிரபுவே! உண்மையைச் சொல்ல நாவெழவில்லை. என்ன செய்வேன்! அவ்வளவுதான் நமக்குப் பிராப்தம். இனி அதை மறந்து விடுங்கள்” என்றான்.

"கெட்ட சாமாசாரத்தைக் கேட்டறிந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால், மனவேதனை முன்னிலும் அதிகரிக்கும். ஆகையால் தயவுசெய்து சீக்கிரம் தெரிவியும்" என்று கூறிய வண்ணம் வஸந்தராவ் சர்வாதிகாரியின் கையைப் பிடித்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/122&oldid=1231950" இலிருந்து மீள்விக்கப்பட்டது