உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிணமும் பித்தரும்

105

"பிரபுவே! அவள் இறந்து போய்விட்டாள். அவளுடைய பிணம் சர்க்கார் வைத்தியசாலையில் கிடக்கிறது" என்று நிரம்பவும் தடுமாறிய குரலில் தெரிவித்தான் சர்வாதிகாரி.

திடீரென்று உண்டாகும் பேரிடியோசை ஒருவனது தேகத்தை எப்படி நடுக்குவிக்குமோ, அப்படி அந்தச் செய்தியால் அவரது சரீரம் ஆடியசைந்தது. அவரது மனதில் அச்சமும் விசனமும் தோன்றின. கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மூர்ச்சித்து வேரற்ற மரம்போல் அவ்விடத்திலேயே விழுந்து விட்டார். அதைக் கண்டு பெரிதும் திகைப்பையும் நடுக்கத்தையும் அடைந்த சர்வாதிகாரி, உடனே ஈரத்துணியால் அவரது முகத்தைத் துடைத்து, உபசரணை செய்ய, சிறிது நேரத்தில் அவர் கண்களைத் திறந்துகொண்டு எழுந்து உட்கார்ந்து கன்றைப் பிரிந்த தாய்போலக் கோவெனக் கதறியழுதார்; தமது உன்னத பதவியை மறந்து, சர்வாதிகாரியைக் கட்டிக்கொண்டு வாய் விட்டுப் புலம்பி, பெருத்த விசனமானது பெரிய மனிதனையும், சிறிய மனிதனையும் ஒரே நிலைமைக்குக் கொண்டு வரும் என்பதைக் கண்கூடாய்க் காட்டி, மல்லிகாவின் பிரேதம் கிடந்த இடத்திற்கு தன்னை உடனே அழைத்துப் போகும்படி அவனிடம் கேட்டுக் கொண்டார்.

சர்வாதிகாரி அதற்கிணங்கி உடனே அவரை அழைத்து நடத்திக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தான். இருவரும் வைத்தியசாலைக்குள்ளிருந்த ஒர் இருண்ட அறையில் நுழைய, அங்கு கிடத்தி வைக்கப்பட்டிருந்த பிரேதம் கண்ணில் பட்டது. அதன் மீது மூடப்பட்ட சால்வையைப் பார்த்தவுடன் வஸந்தராயரது தேகம் பதைத்தது. தாமும் மல்லிகாவும் பவானியம்மாள்புரத்திலிருந்து புறப்பட்ட அன்றிரவு, தமது அருமைக் கண்மணியின் மேல் தாம் அதைப் போர்த்தியது நினைவுக்கு வந்தது. அவள் இறந்தாளென்பதை அதுவரையில் உண்மையாக நம்பாத அவரது மனதில், அவள் இறந்துவிட்டாளென்னும் விஷயம் நிதரிசனமாகப் பதிந்தது. அவர் அலங்கோலமாகப் பாய்ந்து கதவருகில் விழுந்து, வாய் விட்டுக் கதறினார். அந்த உடம்பைத் தமது கையால் அணைத்துக் கொண்டார். அதன் முகத்தை மறைந்திருந்த சால்வையைச் சிறிது விலக்கி முகத்தைப் பார்க்க முயன்றார். முகம் அடையாளங் கண்டுபிடிக்கக் கூடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/123&oldid=1231955" இலிருந்து மீள்விக்கப்பட்டது