உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தளுக்கும் குலுக்கும்

109

மேனி அழகுடையதாய் இருந்ததாயினும், விசனமென்னும் கறையான் அவளது மனதை அரித்துத் தின்று கொண்டே வந்தது.

அவர்களது நிலைமை இவ்விதமிருக்க, இந்திரசபா நாடகத்தின் கடைசி ஒத்திகை நாள் வந்தது. கதை முழுவதையும் நாடக தினத்தில் எப்படி நடத்துவார்களோ, அப்படியே அன்று வாத்தியங்களோடும், அவரவர்களுக்குரிய வேஷங்களோடும் நடிப்பது வழக்கம். ஆதலால், எல்லோரும் அன்று இரண்டு மூன்று நாழிகைக்கு முன்பாகவே நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். வழக்கம்போல மல்லிகாவும், கிருஷ்ணவேணியுடன் சென்றாள். மல்லிகா தன்னை எவரும் அறியக் கூடாதென்னும் எண்ணத்தோடு தனது பெயரை ஸஞ்சலாட்சி என்று மாற்றிக் கொண்டாள்.

அன்று, தமயந்திபாயி, தான் முக்கியமான ஸ்திரீ வேஷந்தரித்து நடித்து நல்ல பெயரெடுக்கப் போவது பற்றியும், தன்னை மீறியவர் எவருமில்லையென்னும் நினைவினாலும் பெரிதும் செருக்கடைந்தவளாய் மிக்க உல்லாஸமாகக் குலுக்கி மினுக்கி நடந்து வந்தாள்; காண்போர் யாவரையும் அலட்சியமாக மதித்து ஏளனம் செய்து கொண்டேயிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் மல்லிகாவைப் பார்த்திருந்தாளாயினும், அவளை மதித்து அவளிடம் பேசியதில்லை. அன்றைய தினம் அவள் தனிமையில் திரைக்கு வெளியில் உட்கார்ந்திருந்தபோது அங்கு வந்து, "நீ ஒவ்வொரு நாளும் கிருஷ்ணவேணியோடு வருகிறாயே, உனக்கும் அவளுக்கும் என்ன சொந்தம்?" என்று கேட்டாள். "நான் அவளுடைய தங்கை" என்றாள் மல்லிகா. “ஓகோ அப்படியா! அதனால்தான் இணைபிரியாத காதலரைப் போலிருக்கிறீர்களோ அதிருக்கட்டும். நான் ஒரு சங்கதி சொல்லுகிறேன். அதை உன்னுடைய பிரியமான அக்காளுக்குத் தெரிவி. அவளுக்கு இப்போதுதான் திலோத்தமை வேஷம் கொடுத்திருக்கிறார்கள். கம்பத்தைப்போல வந்து நிற்பதே அந்த வேஷக்காரி செய்ய வேண்டிய வேலை. அதை நடிப்பதற்குள் அவளுக்குத் தலை திரும்பி விட்டது; அவள் கொண்டிருக்கும் இறுமாப்புக்கு அளவில்லை. இன்னும் முக்கியமான சிறந்த வேஷங்களைக் கொடுத்து விட்டால், அவள் என்ன செய்வாளோ தெரியவில்லை; தலைகீழாகத்தான் நடப்பாள். கொஞ்சம் நிதானமாக நடக்கச் சொல்" என்றாள் தமயந்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/127&oldid=1232033" இலிருந்து மீள்விக்கப்பட்டது