பக்கம்:வசந்த மல்லிகா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தளுக்கும் குலுக்கும்

111

நின்று கொண்டிருந்த குதிரை வண்டிகளில் ஒன்றில் அவளைக் கிடத்தினார். அவருடன் தொடர்ந்து வந்த மனிதரின் முக்கியமான வேறு இருவரையும் வண்டியில் உட்கார வைத்து உடனே சர்க்கார் வைத்தியசாலைக்கு வண்டியை ஒட்டும்படிச் சொல்ல, வண்டிக் காரன் அவ்வாறே அதிவிரைவாக வண்டியை ஒட்டிச் சென்றான்.

வாசலிலிருந்து உள்ளே வந்த கோவிந்தசாமிராவின் முகம் பெரிதும் விசனத்தைக் காண்பித்தது. என்ன செய்வதென்பதை அறியாதவராய் திரைக்குள்ளிருந்த ஒரு நாற்காலியில் சாய்ந்தார். அன்று அதற்கு மேல் ஒத்திகை இல்லையென்று சொல்லி, வந்திருந்த ஜனங்களை அனுப்பிவிட்டு; தமது சிரத்தில் கையை வைத்துக்கொாண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். மறு நாள் தசராப் பண்டிகையாதலால், அன்றிரவு அரண்மனையில் பாயிலாகேப்பிகளுக்கு எதிரில் நாடகம் நடத்த வேண்டிய கட்டாயமிருந்தது. முக்கியமான ஸ்திரீ வேஷக்காரிக்கு அத்தகைய விபத்து வந்து விட்டமையால், நாடகத்தை எப்படி நடத்துவதென்பது பற்றி அவர் கவலையில் ஆழ்ந்தார். இந்திர சபாவில் நிரம்பவும் திறமையோடு நடிக்க வேண்டிய முக்கியமான ஊர்வசி வேஷத்தை ஒரு நாளில் கற்றுக் கொண்டு நடிக்கத் தகுந்த அபார சக்தி வாய்ந்தவள் ஒருத்தியுமில்லையென்று அவர் உறுதியாக நினைத்தாராயினும் ஒருவேளை தெய்வச் செயலாக எவளாயினும் அகப்பட மாட்டாளா என்ற ஒரு மூட நம்பிக்கையைக் கொண்டவராய் இருந்தார். அந்தச் சமயத்தில் அவருக்கெதிரில் கிருஷ்ணவேணியுடன் பேசிக் கொண்டிருந்த மல்லிகாவைப் பார்த்தார். அவளது பேரழகையும், வசீகரமான தோற்றத்தையும் அப்போதே அவர் நன்றாக உற்று நோக்கினார். அதுவரையில் அவள் கிருஷ்ணவேணியுடன் வந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்திருந்தார்; அவளது சிநேகிதை என்று நினைத்துக் கொண்டு, அவளை அதிகம் கவனியாமலிருந்தார். இப்போது அவளைப் பார்த்தவுடன் அவரது மனதில் ஒருவித எண்ணம் உதித்தது. உடனே கிருஷ்ணவேணியை மெதுவாகத் தம்மிடம் அழைத்தார். அவள் தனியாக வர, அவளை மறைவான ஒர் இடத்திற்கு அழைத்துப் போய், "கிருஷ்ணவேணி! உன்னோடு கூட வந்திருக்கிறாளே, அவள் யார்?" என்று நயமாகக் கேட்டார்.

"அவள் என்னுடைய சிநேகிதை" என்றாள் கிருஷ்ணவேணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/129&oldid=1232063" இலிருந்து மீள்விக்கப்பட்டது