உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

வஸந்தமல்லிகா

சியமாகத் தட்டிக் கொண்டே இராமஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினார். அன்று தமயந்திபாயிக்குப் பதிலாக வருபவள் அவளைக் காட்டிலும் அழகிற் சிறந்தவளென்றும், அவளைக் காட்டிலும் அதிக திறமையோடு நடிக்கப் போவதையும் கேள்வியுற்ற ஜனங்கள் அவள் எப்போது வரப் போகிறாள் என்று மிகுந்த ஆவலுடன் அவளது வருகையை எதிர்பார்த்திருந்தனர். சிறிது நேரத்தில், ஊர்வசி வர வேண்டிய காட்சி ஸமீபித்தது. எல்லோரும் இமை கொட்டாமல் மேடையையே பார்த்தவண்ணமிருந்தனர். அவள் வருவதற்கு அடையாளமாக ஒரு தில்லானா வாசிக்கப்பட்டது. அடுத்த நிமிஷத்தில், ஆகாயத்திலிருந்து ஒரு கந்தருவ ஸ்திரீ இறகுகளுடன் பறந்து வெகு அழகாய்க் கீழே வந்து சேர்ந்தாள். அவளது ஜாஜ்வல்லியமான பேரழகைக் கண்ட ஜனங்கள் பிரமிப்படைந்து பேச்சு மூச்சற்று உட்கார்ந்திருந்தனர். அவள் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு வந்ததே தெரியாமல் பறந்து வருவதைப் போல சாமர்த்தியமாக வந்து சேர்ந்ததைக் கண்ட ஜனங்கள் அனைவரும் வியப்படைந்தனர். அதுவரையில் இருந்த ஒசையெல்லாம் அடங்க சப்தமே இல்லாமல் ஒடுங்கியது. பூமியில் வந்தவுடன் அவள் பேச ஆரம்பித்தாள். அவள் ஸாதாரணமாகப் பேசியதே பாடுவதைப் போல செவிகளுக்கு மிக்க இனிமையாக கோகிலத்வனியைப் போலக் கேட்டது. அவள் ஸந்தர்ப்பத்திற்கு ஏற்ப, ஊர்வசியின் மனநிலைமையை நன்றாக வெளிப்படுத்தி அழகாய் மொழிந்தது ஜனங்களின் செவிகளைவிட்டு அகலாமல், அமிர்தம் சொரிவதைப் போலிருந்தது. எல்லோரும் அடக்கவொண்ணாத சந்தோஷத்தினால் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தனர். அந்தக் காட்சி முடிய, அவள் உள்ளே போனவுடன், கோவிந்தசாமி ராவ் மனங்கொள்ளா மகிழ்வோடு ஓடி வந்து, "ஸஞ்சலாட்சி! நீ பெருத்த புகழை சம்பாதித்துக் கொண்டாய். இத்தனை வருஷமாக இங்கு நடித்தவர்களுள் ஒருத்தியாவது உன்னைப்போல நடித்ததேயில்லை. உன்னை பாயிஸாகேப்புகள் பெரிதும் மெச்சிக் கொள்ளுகிறார்கள்" என்று சொல்லிவிட்டு அப்பால் நடந்தார். அடுத்த நிமிஷத்தில் கிருஷ்ணவேணி ஓடோடியும் வந்து மல்லிகாவை மிகுந்த ஆசையோடு கட்டித் தூக்கி இறுக ஆலிங்கனம் செய்து கொண்டு தனது பெருமகிழ்வைத் தெரிவித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/134&oldid=1232124" இலிருந்து மீள்விக்கப்பட்டது