புதிய ஊர்வசி
117
பிறகு, மல்லிகா தோன்றிய ஒவ்வொரு காட்சியிலும் அவள் வரும்போதும், பேசும்போதும், பாடும்போதும், உள்ளே போகும் போதும், ஜனங்களது மனதை அவள் காந்தத்தைப் போலக் கவர்ந்து தன் வசமாக்கினாள். அவர்கள் தம்மை முற்றிலும் மறந்து அடிக்கடி பெருத்த கரகோஷம் செய்த வண்ணமிருந்தனர். அவள் முதல் நாள் கற்றுக்கொண்டு மறு நாள் அவ்வளவு பெரும் புகழ் சம்பாதித்ததைப் பற்றி எல்லோரும் அதிசயித்தனர்.
ஜனங்களில் ஆண்பாலரிருந்த இடத்தில் கோனூர் மிட்டாதார் உட்கார்ந்திருந்தார். அவர் வந்த சிறிது நேரத்தில் பீமராவ் வந்து சேர்ந்தான். அவன் தமயந்திக்குச் சொந்தக்காரனென்னும் பாத்தியத்தினால் ஒவ்வொரு நாடகத்திற்கும் உள்ளே வர அநுமதி பெற்றிருந்தான். அன்று அவனது மன நிலைமை எப்படி இருந்த தென்பதைச் சிறிது கவனிப்போம். அவன் பல நாட்களாக மல்லிகாவைத் தேடிக் காணாமல், மனவருத்தமடைந்தவனாய் தனது எண்ணம் பலியாமற் போய்விட்டதைப் பற்றி ஏங்கி, ஓரிடத்தில் தரித்து நில்லாமல் பைத்தியங் கொண்டவனைப் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தான்; வைத்திய சாலையிலிருந்த தமயந்தியை அடிக்கடி பார்த்துப் பெரிதும் விஸ்னப்படுபவன் போலப் பாசாங்கு செய்துவிட்டு வந்து விடுவான். அவன் ஒவ்வொரு நாடகத்தையும் விடாமல் பார்த்தவனாதலால், அவனது மனம் அதிலும் செல்லவில்லை. என்றாலும், அன்று நாடகத்திற்குப் போனால் சற்று நேரமாகிலும் தனது மனோ வியாதி நீங்கிவிடும் என்னும் நினைவோடு அங்கு வந்தான். கோனூர் மிட்டாதார் இருந்ததைக் கண்டு அவருக்கருகில் வந்து உட்கார்ந்து ஸம்பாவித்துக் கொண்டிருந்தான். நாடகம் ஆரம்பத்தின் சில நாட்கள் வரையில் அவன் அதைக் கவனியாமல் நிரம்பவும் அலட்சியமாக எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். ஊர்வசி வரப்போகிறாளென்று ஜனங்கள் ஆவலுடனிருந்த போதும், அவன் அதைக் கவனிக்காமல் இருந்தான். மல்லிகா தோன்றி சிறிது நடித்தவுடன் ஜனங்கள் செய்த கரகோஷத்தைக் கண்டு அவன் அவளைப் பார்த்தான்; உடனே திடுக்கிட்டு உற்று நோக்கினான்; சந்தேகப்பட்டுத் தனது கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பவும் பார்த்து, அவள் தான் மல்லிகாவென்று தெரிந்து கொண்டான்.