புதிய ஊர்வசி
121
கொஞ்சம் சுளுக்கிக் கொண்டிருக்கிறது. அதிகமாக நடக்க முடியவில்லை" என்றான் கிழவன். அந்த ஸமயத்தில் பீமராவும் உள்ளே வர, உடனே கிருஷ்ணவேணி, “இன்று இவருடைய உதவியாலேதான் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்" என்று அவனைக் காட்ட, கிழவன் திரும்பி அவனைப் பார்த்து, "ஓகோ! அப்படியா! பீமராவா! வாடா அப்பா! நீ வந்தது நிரம்பவும் அருமை! வா, இந்தப் பலகையில் உட்கார்" என்று உபசரிக்க, பீமராவ் அப்படியே உட்கார்ந்து கொண்டு அவனது காலின் சுளுக்கைப் பற்றி நிரம்பவும் கவலையோடு விசாரணை செய்தான்.
அதற்குள் கிழவி, எல்லோருக்கும் போஜனத்திற்கு இலைகள் போட ஆரம்பித்தாள். கிருஷ்ணவேணி பீமராவை பார்த்து, "இன்னும் போஜனம் ஆகவில்லைபோலிருக்கிறது. இப்படியே அப்பாவுடன் உட்கார்ந்து போஜனம் செய்து விட்டுப் போகலாமே" என்றாள். உடனே கிழவனும் அன்போடு அவனை வற்புறுத்த, அவன் அதற்குச் சம்மதித்தான்.
அன்று அதிர்ஷ்டம் அவனுடைய சார்பிலிருந்தது. கொட்டகைக்கருகில் குடிவெறியன் வந்ததும், வீட்டில் கிழவன் மெத்தைப் படியிலிருந்து விழுந்ததும் பீமராவுக்கு மிக்க அநுகூலமாக முடிந்தன. அந்த வீட்டிற்குள் வந்து அவர்களுடன் அவ்வளவு அன்னியோன்னியமாகப் பேசிப் பழக, அவன் எத்தனையோ மாதங்கள் முயன்றாலும் அது அவ்வளவு ஸுலபத்தில் முடிந்திராது. அவன் நிரம்பவும் தந்திரியாதலால் கிழவனிடத்திலும், கிருஷ்ணவேணியிடத்திலுமே அதிக கவனமாய்ப் பேசினானேயன்றி, அவன் மல்லிகாவைக் கவனித்துப் பேசியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. போஜனமான பிறகு அவன் தனது வீட்டிற்குப் போகப் புறப்பட்டான்.
"உம்முடைய கால் சீக்கிரம் செளக்கியமாகி விடும் என்று நினைக்கிறேன். ஆனால், இன்னம் நாலைந்து நாட்களுக்கு நீர் நடக்க முடியாதென்று தோன்றுகிறது. இந்த நாடகம் நன்றாயிருக்கிறதென்று இதையே திரும்ப நாளைக்கும் வைத்திருக்கி றார்களாம். நாளைக்கு இவர்களை நானே கொண்டு வந்து விடுகிறேன். நீர் இந்த நிலைமையில் சிரமப்பட்டுக் கொண்டு வர வேண்டியதில்லை" என்றான்.