உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைமுக ஸ்நானம்

125

லையா?” என்று புன்சிரிப்போடு கேட்டான் பீமராவ். அவள், "நான் வரவில்லை" என்று நாணத்துடன் சொல்லிவிட்டு அப்பால் போய்விட்டாள்.

திருவையாற்றுக்குப் புறப்படத் தயாராக அலங்காரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணவேணி அதைக் கேட்டு, "அப்படியானால் ஒருவரும்போக வேண்டாம். அவள் வராமல் நமக்கு மாத்திரம் என்ன திருவையாறு வேண்டியிருக்கிறது. ஸஞ்சலாட்சிக்கு எப்போதும் ஒரே பிடிவாதந்தான். கெட்ட காரியத்துக்கும் அப்படியே; நல்ல காரியத்துக்கும் அப்படியே. இதுதான் ஒவ்வொரு சமயத்தில் அருவருப்பைத் தருகிறது” என்று கடுமை காட்டிய முகத்தோடு குறையாகக் கூறினாள்.

"சே! அப்படியல்ல! அவள் காரணமில்லாமல் ஒரு நாளும் பிடிவாதம் செய்பவளல்ல. ஏதாகிலும் காரணமிருக்கலாம். அவள் மனசுக்கு விரோதமாக நாமேன் செய்ய வேண்டும்; ஒருவேளை அவளுக்கு என் மேல் ஏதாவது வருத்தமிருக்கலாம்" என்றான் பீமராவ்.

"இல்லை இல்லை; அப்படியொன்றுமில்லை. வரக்கூடாதென்பதல்ல. எங்கும் போகாமல் வீட்டிலிருப்பதே எனக்கு பரம ஸுகமாக இருக்கிறது” என்றாள் மல்லிகா.

"சரி; அப்படியானால் நீர் திருவையாற்றுக்குப் போய் எங்களுக்கும் சேர்த்து ஸ்நானம் செய்து விட்டு வாரும்" என்று கூறியவண்ணம் கிருஷ்ணவேணி மிக்க அழகாய் எடுத்துக் கட்டப்பட்டிருந்த தனது தலைப்பின்னலை ஆத்திரத்தோடு அவிழ்க்கத் தொடங்கினாள். அதைக் கண்ட மல்லிகா பெரிதும் மனக்கிலேசம் அடைந்தவளாய், "அடடா! என் மேல் நீங்கள் இவ்வளவு வருத்தப்படுவதாய் இருந்தால் நான் இதோ வந்து விட்டேன். நான் அவசியம் வர வேண்டுமென்று என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு அந்தரங்கமான அபிமானம் வைத்திருப்பதைக் கவனியாமல் அதற்குப் பிரதி உபகாரமாக உங்கள் மனசுக்கு வருத்தத்தையா உண்டாக்குவது? நானும் வருகிறேன். புறப்படுங்கள்" என்று எழுந்தாள் மல்லிகா. உடனே கிருஷ்ணவேணியின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. அவளும் குதித்துக் கொண்டு எழுந்தாள். பிறகு கால் நாழிகையில் நால்வரும் வண்டியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/143&oldid=1232180" இலிருந்து மீள்விக்கப்பட்டது