பக்கம்:வசந்த மல்லிகா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வஸந்தமல்லிகா

உட்கார்ந்து கொள்ள, அது திருவையாற்றை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

அன்றைய தினம் காலைப் பொழுது மிக்க மநோக்கியமாக இருந்தது. செல்லும் வழி முழுதும், பல ஆறுகளும், வாய்க்கால்களும் குறுக்கிடுதலும், பக்கங்களிலெல்லாம் தென்னை, கமுகு, வெற்றிலை முதலியவற்றின் தோட்டங்கள் அழகாய்க் காணப்படுதலும், நெல், மஞ்சள், கரும்பு முதலிய பயிர்கள் பசுமையாகத் தோன்றுதலும் பிரம்மாநந்தமாக இருந்தன. மிருதுவான குளிர்ந்த காற்று வீசி மனதை ஊக்கி இன்பத்தில் ஆழ்த்தியது. அதற்கு முன் ஒரு நாளும் பெட்டி வண்டியில் சவாரி செய்தவர்கள் அன்றாகையால், அவர்கள் அவ்வித அழகான காட்சிகளைக் கண்டு பரவசம் எய்தினர். ஆனால், மல்லிகாவிற்கோ அவளது மனதில் மறைந்து கிடந்த விசனம் அடிக்கடி தோன்றி அவளது உல்லாசத்தைக் குலைத்தது. கிருஷ்ணவேணி மெய்மறந்து நகைத்து குழந்தையைப் போல விளையாடி ஹாஸ்யமாகப் பேசி யாவரிடத்திலும் பரிஹாசம் செய்து கொண்டே சென்றாள். கிழவனும் அவர்களுடன் குழந்தையைப் போலத் தனது மனமகிழ்ச்சியைத் தோற்றுவித்தான். அவர்கள் மூவருக்கும் பீமராவிடத்தில் ஒருவித அன்பும் அபிமானமும் ஏற்பட்டன. நெடுநாட் பழகினவளைப் போல கிருஷ்ணவேணி அவனோடு நிரம்பவும் தாராளமாக விளையாடிப் பரிஹாசம் செய்யத் தொடங்கினாள். அவன் கிருஷ்ணவேணியிடத்திலும் கிழவனிடத்திலும் நிரம்பவும் உறவு பாராட்டி தாராளமாகப் பேசிய வண்ணம் சென்றானாயினும், மல்லிகாவிடத்தில் பேசிய போதெல்லாம், அவன் தனது குரலை நிரம்பவும் பட்சமாகவும், மரியாதையாகவும் மாற்றி அடக்கியவண்ணம் அப்போதைக்கப் போது எதையாகிலும் மொழிந்த வண்ணம் சென்றான். திருவையாற்றில் காவிரியாற்றின் வடகரையின் மேல் வரிசையாக மெத்தை வீடுகளும், மண்டபங்களும் இருந்தன. அவற்றிலிருந்து, பின்புறமாக ஆற்றிற்குள்ளிறங்கி ஸ்நானம் செய்ய கருங்கல் படித்துறைகள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. அவ்விடத்தில் அவர்கள் தங்குவதற்கு பீமாராவ் ஒரு மெத்தை வீட்டை அமர்த்தியிருந்தான். அதற்குள் அவர்கள் நால்வரும் சென்றனர். ஆறு நிறைய தெளிந்த ஜலம் அழகாக போய் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/144&oldid=1232184" இலிருந்து மீள்விக்கப்பட்டது