உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைமுக ஸ்நானம்

127

அவ்வீடுகளின் பின்புற வாசற்படிகள் வரையில் ஆற்றின் ஜலம் எட்டியிருந்தது மிக்க வேடிக்கையாக இருந்தது. அரை நாழிகையில் எல்லோரும் ஆற்றில் ஸ்நானம் செய்தான பிறகு, மெத்தையிற் சென்று உட்கார்ந்து கொண்டனர். அருகில் பளபளப்பாக ஒடிய விஸ்தாரமான நீர்ப்பரப்பை அந்த மேன்மாடத்திலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எதிர் பக்கத்துறையில் யெளவன ஸ்திரீகளும் புருஷரும் வரிசை வரிசையாக நின்று வஸ்திரங்களைத் துவைத்து ஸ்நானஞ் செய்வதும், அந்தணர் முதலியோர் விபூதி உருத்திராக்ஷங்களுடன் மண்டபங்களிலும் அரசமரத்தடிகளிலும் பத்தி பத்தியாக உட்கார்ந்து ஜெபம் செய்வதும் மனோரம்மியமாக இருந்தன.

பீமராவ் தனது நண்பர்களுக்கு நல்ல முதல் தரமான விருந்து செய்யும்படி ஒரு போஜனசாலையில் ஏற்பாடு செய்திருந்தான். ஆகையால், அங்கிருந்து பஞ்சபக்ஷிய பரமான்னத்துடன் மாதுரியமான போஜனம் வீட்டிற்கே வந்து சேர்ந்தது. பீமராவும் கிழவனும் ஒரு பக்கமாகவும், பெண்களிருவரும் சற்று தூரத்திலும் சாப்பாட்டிற்கு உட்கார்ந்தனர். அன்று கிடைத்த போஜனத்தைப் போல் அவ்வளவு சிறந்ததை அவர்கள் தங்களது ஆயுட்காலத்திலேயே கண்டவர்கள் அல்லாதலால், அவர்கள் அடைந்த ஆநந்தத்திற்கு அளவில்லை. அப்போது தாங்கள் தெய்வலோகத்தில் இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டனர்.

கிருஷ்ணவேணி, "நம்முடைய ஆயிசுகாலம் முழுவதும் இப்படியே ஒவ்வொரு நாளும் திருவையாற்றுக்கு வந்து போஜனம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா உலகத்தில் இவ்வளவு இன்பங்கள் இருக்க, இவற்றை விட்டு நாம் உழைப்பதிலேயே காலத்தை வீணாக்குகிறோமே?" என்றாள். மல்லிகா பெருமூச்சு விட்டாள். பீமராவ் உடனே புன்னகை செய்து, "சரியான கேள்வி நாம் எப்போதும் சந்தோஷமாக இல்லாதது நம்முடைய குற்றமேயொழிய வேறல்ல" என்றான்.

"ஆனால், தினந்தினம் திருவையாற்றில் நான் விருந்து சாப்பிடாததும் என்னுடைய பிசகுதானோ?" என்று பரிஹாஸமாகக் கேட்டாள் கிருஷ்ணவேணி.

பீம : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் இன்பம்; உனக்கு இந்த ஊரில் தினம் விருந்து சாப்பிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/145&oldid=1232192" இலிருந்து மீள்விக்கப்பட்டது