பக்கம்:வசந்த மல்லிகா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

ரணி குப்புசாமி முதலியாரைத் தொடர்ந்து அவர் பாணியில் தழுவல்களாக எழுதியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தழுவல் நாவல்களாயிருந்தபோதிலும் தமிழ்நாட்டு இடப் பெயர், மக்கள் பெயர்களை வைத்தே ஜனரஞ்சகமாக எழுதப்பட்டதால், இவரது நாவல்கள்தான் தமிழ்நாட்டில் ஒரு பரந்த வாசகர் உலகத்தைச் சிருஷ்டித்து வைத்தன. புத்தகம் படிக்கும் பழக்கம் இந்த நாவல்களால் ஏற்பட்டது ஒரு புறமிருக்க, கண்டமேனிக்கு கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்யக் காரணமாய் இருந்ததும் வடுவூரார் நாவல்கள் தான். ஆக, அக்காலச் சூழ்நிலையை ஒரு விமர்சகர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்:

'அச்சுப் பொறி மலிந்து காகித வர்த்தகம் பெருகி வரும் இக்காலத்தில் நாவல்களும் புற்றீசல்போல் தோன்றித் தொடங்கி விட்டன. மக்களின் ஆசாரங்கள் சீர் பெறவும், பாஷை வளர்ச்சியுறவும் நாவல்கள் பெரிதும் உதவி புரியும் என்பது உண்மையே. ஆனால், தடியெடுத்தோரெல்லாம் வேட்டைக்காரர் என்றபடி தமிழ் உலகத்திலே இறகோட்டிகளெல்லாம் நாவலாசிரியர்களாய் முன்வந்திருப்பதால் தற்கால நாவல்கள் பெரும்பாலானவற்றால் விளையும் தீமைகள் அற்ப சொற்ப மன்று. 'ர'கர 'ற'கரங்களைச் சரியாய் வழங்க அறியாதவர்களும் தமிழ் எழுத்தாளராகத் துணிவு கொள்வதும் தமிழ் மொழியின் சனி திசையென்றே கூற வேண்டும். ஒன்றோ இரண்டோ விட புருஷர்கள், இரண்டோ மூன்றோ நாணமற்ற கன்னியர்கள், ஒரு துப்பறியும் கோவிந்தன் அல்லது கோபாலன், ஒரு ஆகாவழி ஜமீந்தார் - தமிழ் நாவல் பூர்த்தியாகி விடுகிறது. தற்காலத்தில் துப்பறியும் நாவல்களெல்லாம் பிற நாட்டுப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங்களையும் தமிழகத்தில் பரப்பித் தமிழ் மக்களை அனாசாரப் படுகுழியில் தலைகீழாக வீழ்த்துகின்றன. நாவல்களின் தன்மை இன்னதென்றறியாத தமிழ் மக்களும் இந்த நாவல் புற்றீசல்களைக் கோழி விழுங்குவதுபோல் விழுங்கித் திருப்தி அடைகின்றனர் (லக்ஷ்மி, செப். 1924, முத்து மீனாட்சி தாவலுக்கு மதிப்புரையில்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/15&oldid=1229091" இலிருந்து மீள்விக்கப்பட்டது